உலகம் முழுவதும் முட்டை உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை கோழியின் முட்டைதான்.
தமிழ்நாட்டில் முழுதாக அவித்தும், தோசைக் கல்லில் வெங்காயம் போட்டும் போடாமலும் 'ஆம்லெட்', திருப்பிப் போடாமல் 'ஒன்சைடு ஆம்லெட்', பாதி வெந்த நிலையில் 'ஆஃப்-பாயில்', திருப்பிப் போட்டு முழுமையாக வெந்த 'புஃல்-பாயில்', கலக்கி ஊற்றி வழித்து எடுத்த 'கலக்கி' (டிக்கா- வழியல்), சோற்றில் போட்டு வறுத்தால் 'பிரைடு ரைஸ்', நூடுல்ஸில் போட்டு வறுத்தால் 'எக் நூடுல்ஸ்', புரோட்டாவில் புரட்டியும், கொத்தியும் போட்டால் 'கொத்து பரோட்டா', 'முட்டை பரோட்டா', முட்டைப் பணியாரம், முட்டை போண்டா, முட்டை தோசை, முட்டை மசாலா, முட்டைக் குழம்பு, கரண்டி ஆம்லெட் என நீண்டு கொண்டே செல்கிறது முட்டை உணவு வகைகள்.
இந்த வரிசையில் முக்கியமானது 'முட்டை மாஸ்'. இப்போது ஓரளவுக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக 'முட்டை மாஸ்' கிடைத்தாலும், அதற்கெனத் தனி ருசியையும் வரலாற்றையும் பூர்வீகத்தையும் கொண்டது புதுக்கோட்டை.
புதுக்கோட்டை வந்து செல்வோர் முட்டை மாஸை கேட்டு வாங்கி உண்ணாமல் செல்ல மாட்டார்கள். ஏறத்தாழ எல்லாக் கடைகளிலும் முட்டைமாஸ் கிடைக்கும். மூன்று வேளையும்!
தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, அவித்து வைத்த முட்டையை நான்கு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிப் போட்டு கொஞ்சம் குழம்பு சேர்த்து, கெட்டியாக சுடச்சுட தட்டில் வழித்து இலையில் இறக்குவார்கள். அந்தக் 'குழம்பு' தான்- முட்டைமாஸின் ருசிக்குக் காரணம்.
பொதுவாக வீடுகளில் இந்த உணவை முயற்சிக்க விரும்பினால் அசைவக் குழம்பு எது இருந்தாலும் ஊற்றிக்கொள்ளலாம். ஆனால், புதுக்கோட்டையில் அப்படியல்ல. இதற்கென தனியே குழம்பு வைக்கிறார்கள். அதுதான் நாக்கின் வழியே நம்மைக் கிறங்கச் செய்கிறது. ஒரு காலத்தில் மட்டன் குழம்பு, கோழிக்குழம்பு, மீன் குழம்பு எல்லாமும் கலந்து சேர்த்த ஒன்றாகத்தான் அந்தக் குழம்பு இருந்திருக்கிறது.
இதன் பின்னணியில்தான் ஒரு வரலாறு கூறப்படுகிறது. இரவில் கடை முடிந்த பிறகு, கடையின் உரிமையாளருக்கும், பணியாளர்களுக்கும் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில், அவித்த முட்டையும், மீந்து போன சில குழம்புகளும் மட்டுமே இருந்தபோது, அவற்றைக் கொண்டு அவசரத் தேவைக்காக செய்த உணவாகத்தான் முட்டை மாஸைச் சொல்கிறார்கள். புதுமையான- சுவையான உணவாக இருந்ததால் இதனை தனி வகையாக செய்யத் தொடங்கியதாகத் தெரிகிறது.
மாவட்டம் முழுவதும் எல்லாக் கடைகளிலும் 'முட்டைமாஸ்' கிடைக்கும் என்றாலும், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள கார்த்திக் மெஸ், நகர்மன்றத்துக்கு வெளியே உள்ள முத்துப்பிள்ளை கேண்டீன் ஆகியவை முட்டைமாஸுக்கு பெயர் போனவை.
காலைச் சிற்றுண்டி, இரவுச் சிற்றுண்டியில் இட்லிக்கும், இடியாப்பத்துக்கும் முட்டைமாஸ்- 'மாஸ்' காட்டும். இதுதவிர மதிய உணவு, பிரியாணி, சப்பாத்தி, பரோட்டா என எல்லாவற்றுக்கும் முட்டைமாஸ் சேரும் என்பதுதான் முக்கியமானது.
இரட்டை முட்டை போட்ட 'டபுள் மாஸ்' விலை முப்பது ரூபாய். ஒற்றை முட்டை போட்ட 'சிங்கிள் மாஸ்'- 15 ரூபாய். நட்சத்திர உணவகங்களில் விலை அதிகமாக இருக்கலாம்.
முட்டைமாஸின் நீட்சியாக இன்னொன்றும் புதுக்கோட்டையில் கிடைக்கிறது.
'பச்சை முட்டைமாஸ்'. முட்டையை அவிக்காமல், வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, குழம்பு போட்டு முழுமையாக வேகவிடாமல் வழித்து இலையில் இறக்கிவிட வேண்டும். அதுதான் 'பச்சை முட்டைமாஸ்'. இதுவும் 'டபுள் மாஸ்', 'சிங்கிள் மாஸாகக் கிடைக்கிறது.
அடிக்கடி புதுக்கோட்டைக்கு வந்து செல்வோர் அல்லது புதுக்கோட்டை வழியாக ராமநாதபுரத்துக்கோ, சிவகங்கைக்கோ, திருச்சிக்கோ, தஞ்சைக்கோ செல்வோர் மட்டுமல்ல, முட்டை மாஸை சுவைப்பதற்காகவே ஒரு முறை புதுக்கோட்டை வந்து செல்லலாம். அப்படியொரு சுவை!
நன்றி: தினமணி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.