புதுக்கோட்டையில் தொடரும் ஆன்லைன் சம்பவம்: முகநூலில் பழகி புதுகை நபரிடம் இருந்து ரூ. 1.87 லட்சம் மோசடி!



புதுக்கோட்டையில் ஆன்லைன் மோசடி சம்பவம் அதிகரித்துள்ளது. கோர்ட்டு ஊழியரிடம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்தை மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகவலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தற்போது மோசடி சம்பவங்களும் அதிகரித்துள்ளது. மர்மநபர்கள் நூதன முறையில் பழகி பணத்தை கூகுள் பே மற்றும் ஆன்லைன் மூலம் தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்ப கோரி மோசடி செய்துவிடுகின்றனர்.

புதுக்கோட்டையில் இதுபோன்ற ஆன்லைன் மோசடி சம்பவம் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது. பணத்தை பறிகொடுத்தவர்கள் சைபர் கிரைம் போலீசாரை நாடி புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரைக்கும் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த கோர்ட்டு ஊழியர் ஒருவரிடம் பேஸ்புக்கில் லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் பெயரில் மர்மநபர் அறிமுகமாகியிருக்கிறார். இதில் அவர் பெண் குரலில் கோர்ட்டு ஊழியரிடம் அடிக்கடி பேசியிருக்கிறார். மேலும் அவருக்கு பரிசு பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் மர்மநபர்கள் டெல்லி விமானநிலையத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாகவும் அதற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் பேசியிருக்கின்றனர். இதனை நம்பிய கோர்ட்டு ஊழியர் வங்கி மூலம் 3 முறை என மொத்தம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து750 அந்த நபரின் வங்கி கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார். பணம் செலுத்தியும் பரிசு பொருள் வராததால் தான் மோசடி செய்ததை உணர்ந்தார்.

இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசில் கோர்ட்டு ஊழியர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்புக்கில் பெண் போல அறிமுகமாகி பண மோசடியில் ஈடுபடும் கும்பல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

கோர்ட்டு ஊழியர் பணம் செலுத்திய வங்கி கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரித்ததில் டெல்லி, உத்தரபிரதேச மாநில கிளை என தெரிந்தது. அங்குள்ள வங்கிகளின் கிளைக்கு சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்து அந்த கணக்குதாரர்களின் விவரங்களை கேட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments