கறம்பக்குடி அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல்! 2 வாலிபர்கள் கைது!!கறம்பக்குடி அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. 

இதையடுத்து புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கறம்பக்குடி பகுதியில் சோதனை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி தொம்பர அப்பச்சி கோவில் தைலமரக்காட்டில் லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த தினேஷ் (வயது 23), ராஜேஷ் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 370 மதிப்புள்ள 2,220 செட் லாட்டரி சீட்டுகள், ரூ.20 ஆயிரத்து 473, மற்றும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீசார், லாட்டரி விற்பனையில் தொடர்புடைய கருப்பையா, ரெங்கசாமி, நீலகண்டன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments