திருச்சி, புதுக்கோட்டை உள்பட 5 மாவட்டங்களில் வனப்பரப்பு அதிகரிப்பு




திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க ஆண்டுக்கு 4½ கோடி மரக்கன்றுகள் நட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க ஆண்டுக்கு 4½ கோடி மரக்கன்றுகள் நட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


வனப்பகுதி

மனிதனுக்கும், விலங்குகளுக்கும் முன்னொரு காலத்தில் காடுகள் தான் புகலிடம். நாளடைவில் நாகரிகம் வளரத்தொடங்கியவுடன் மனிதன் காட்டை அழித்து நிலங்களை பிரித்துக்கொண்டான். ஆனால் இன்னும் காடுகள் வன விலங்குகளுக்கு புகலிடமாகவே விளங்குகிறது. அதேபோல மனிதன் வாழ்வதற்கு தேவையான காற்றை கொடுப்பதில் காடுகளின் பங்கு மிக அதிகம்.
இந்த காடுகள்தான் மனித இனத்தின் வரம். மனிதன் வாழ இன்றியமையாத தண்ணீரை மழை மூலமாகவும், மண் அரிப்பை தடுப்பது மூலமாகவும், பழங்களை உணவாக கொடுத்தும் மனிதனுக்கு பல வழிகளில் காடுகள் உதவியாக இருந்துவருகின்றன. காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல, அது ஓர் உயிரியல் சார்ந்த கட்டமைப்பு.

வனவிலங்குகள்

வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தொடங்கிவிட்டன என்று சொல்லும் முன்னர், சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். அதனுடைய வனப்பகுதியை அழித்து, வாழ்வாதாரத்தை நிர்கதியாக்கிவிட்டால் விலங்குகள் ஊருக்குள் வராமல் என்ன செய்யும். அதேபோல காடுகளை அழித்துவிட்டு கட்டிடங்களாக மாற்றிக்கொண்டால் விலங்குகள் எங்கே போகும். காடுகளில் இருக்கும் பறவைகளும் எங்கே போகும்.

உயிர்ச்சூழலைக் காக்கும் முக்கியப் பொறுப்பு வகிப்பவை மரங்கள் தான். உலகில் இன்றைய புவி வெப்ப உயர்வுக்குக் காரணம் வனங்கள் பெரும்பான்மையாக அழிக்கப்பட்டதுதான். அதனால் தான் தற்போது வனப்பரப்பை அதிகரிக்க மரங்களை அதிக அளவில் நடவு செய்யவேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

23.98 சதவீதம் வனம்

காடுகளில் ஊசி இலைக்காடுகள், சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றாற்போல அமைந்துள்ளன. தேசிய வனக்கொள்கை 1988-ன் படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதியாக இருந்தால் தான் நாடு செழுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,060 சதுர கிலோமீட்டர் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 26,364 சதுர கிலோ மீட்டர் (அதாவது 20.27 சதவீதம்) வனப்பகுதி இருப்பதாக இந்திய வன அளவை நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இது கடந்த 2 ஆண்டுகளில் 23.98 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வனப்பகுதி அதிகரிப்பு

இந்திய வன அளவை நிறுவனத்தின் 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4,509 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட திருச்சி மாவட்டம் 471.36 சதுர கிலோமீட்டர் (10.45 சதவீதம்) பரப்பளவு வனப்பகுதியை கொண்டுள்ளது. 2017-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2 ஆண்டுகளில் 30.33 சதவீதம் வனப்பகுதி திருச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதுபோல் 4,644 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் 364.79 சதுர கிலோமீட்டர் (7.86 சதவீதம்) பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. 2017-ம் ஆண்டை ஒப்பிடும் போது 7.30 சதவீதம் வனப்பகுதி இந்த மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

மேலும் 2,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கரூர் மாவட்டத்தில் 118.46 சதுர கிலோமீட்டர் (4.08 சதவீதம்) பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. 2017-ம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த மாவட்டத்தில் 7.02 சதவீதம் வனப்பகுதி அதிகரித்துள்ளது. அதுபோல் 1,940 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அரியலூர் மாவட்டத்தில் 393 சதுர கிலோமீட்டர் (20.26 சதவீதம்) பரப்பளவு வனப்பகுதி உள்ளது. 2017-ம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த மாவட்டத்தில் 3.96 சதவீதம் வனப்பகுதி அதிகரித்துள்ளது. மேலும் 1,756 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் 141.26 சதுர கிலோமீட்டர் (8.04 சதவீதம்) பரப்பளவு வனப்பகுதியை கொண்டுள்ளது. 2017-ம் ஆண்டை ஒப்பிடும் போது 18.35 சதவீதம் வனப்பகுதி அதிகரித்துள்ளது.

தொலைநோக்கு திட்டம்

குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, முந்தைய ஆண்டுகளை விட திருச்சி மாவட்டத்தில் 11.64 சதவீதமும், கரூர் மாவட்டத்தில் 9.54 சதவீதமும், பெரம்பலூர் மாவட்டத்தில் 2.74 சதவீதமும் வனப்பகுதி குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. நவீன காலத்தில் பல மாநிலங்களில் வனப்பரப்பு குறைந்துவரும் நிலையில் தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் வனப்பரப்பு அதிகரித்து வருகிறது.
விரைவில் இந்திய வன அளவை நிறுவனம் 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடும்போது இது உறுதி செய்யப்படும். இந்தநிலையில் தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க தற்போதைய தி.மு.க. அரசு தொலைநோக்கு திட்டம் உருவாக்கி இருப்பதாகவும், இதற்காக ரூ.37 கோடி அரசின் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மரக்கன்றுகள் நடவு

தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு சதவீதம் வீதம் வனப்பரப்பை அதிகரித்தால் தான், 10 ஆண்டுகளில் 33 சதவீதம் வனப்பரப்பு என்ற நிலையை எட்ட முடியும். ஒரு சதவீதம் வனப்பரப்பு அதிகரிக்க, ஆண்டுக்கு 4½ கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். நடப்பாண்டில் பல லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு பல்வேறு திட்டங்கள் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக வனத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், அரசுப்பள்ளிகள், தனியாா் பள்ளிகள், தனியாருக்கு சொந்தமான இடங்களில் மரங்களை வளா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் 3 அல்லது 4 ஆண்டுகளில் அதிக அளவில் நாட்டு மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் வேப்பமரம், புங்க மரம், அரச மரம், பூவரச மரம் மற்றும் மனிதனுக்கு பலன் தரும் மரங்களை நட முடிவு செய்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய மரக்கன்றுகளை முழுமையாகத் தடை செய்து, இயற்கையோடு இணைந்து வாழும் வகையில் நாட்டு மரங்களை மட்டுமே வளா்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments