புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ள இடங்களை தவிர மற்ற ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெறும்: கலெக்டர் தகவல்!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள கிராம ஊராட்சிகள் தவிர மற்ற கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் கூறினார்.

இதகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி பிறந்த தினமான வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள கிராம ஊராட்சிகள் தவிர ஏனைய கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தற்போது உள்ள பணிகளின் தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல், 2021-22-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற நிலை, கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்- 2021 குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்தல், மின்சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் -மின் சிக்கனம் தேவை இக்கணம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.

இந்த அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments