ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்





ஆயுத பூஜை பண்டிகை வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 15-ந்தேதி விஜயதசமி வருகிறது. தொடர்ச்சியாக சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள்.

இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள் நெரிசல் மூலம் மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் போக்குவரத்துத்துறை கவனமாக உள்ளது.

இதை கருத்தில் கொண்டு பயணிகள் நெருக்கியடித்துக் கொண்டு அதிகளவில் பயணம் செய்வதை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல ஆயுத பூஜைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயணிகளை 3 இடங்களில் பிரித்து அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந் தேதியும், 13-ந் தேதியும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகிற ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 12-ந்தேதி, 13-ந்தேதி ஆகிய 2 நாட்களில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிற பின்வரும் வழித்தடப்பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது இயக்கப்பட்டது போல் கீழ்காணும் விவரப்படி 3 பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.

இதர பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

1.தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம்.

2.பூந்தமல்லி பஸ் நிலையம்.

3.கோயம்பேடு பஸ் நிலையம்

இதில் தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் செல்லும் பஸ்களும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்களும் இயக்கப்படும்.

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மேல் குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் (கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பஸ்கள்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் பஸ்கள் புறப்படும்.

எனவே பொது மக்கள் 3 பஸ் நிலையங்களில் இருந்து புறப்படும் பஸ் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பஸ் நிலையங்களுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இணைப்பு பஸ்கள் மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறி உள்ளார்.

பயணிகள் கூட்டம் அதிகமாக வந்தால் அதற்கேற்ப கூடுதலாக சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments