இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சம் பெற்ற கோபாலப்பட்டிணம் கடற்கரை - தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி) மக்கள்!



சமூக ஆர்வலர் மற்றும் 7-வது வார்டு உறுப்பினரின் முயற்சியால் கோபாலப்பட்டிணம் கடற்கரை - தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி) மக்கள் வெளிச்சம் பெற்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியாததால் தோப்பு சாலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இருளில் மூழ்கி காணப்பட்டது.இதனால், அப்பகுதி மக்கள் இரவில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். பெரியவர்கள், சிறியவர்கள் பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் அரண்மனை தோப்பில் உள்ள ஊற்றில் குடிதண்ணீர் எடுத்து செல்பவர்கள், அப்பகுதி வழியாக மீமிசல் சென்று வரக்கூடிய பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பலர் கீழே விழுந்து பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மேலும் மழை காலம் என்பதால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் தெருவில் நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், அச்சத்துடன் செல்கின்றனர்.

கடந்த 16.10.2021 அன்று GPM மீடியாவில் கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் கடற்கரை - தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி)! ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை என செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி இருந்தோம்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி மன்ற புகார் குறிப்பேட்டில் கடந்த 30.09.2021 அன்று தெருவிளக்கு எரியவில்லை என புகார் ஒன்றை பதிவு செய்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அவர் தெரிவித்தார். இதனையடுத்து 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்சா அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனரிடம் (AD Panchayat) புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று 26.10.2021 அந்த பகுதியில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் சரிசெய்யப்பட்டு எரியவிடப்பட்டது.

தெருவிளக்கு எரிய முயற்சி செய்த சமூக ஆர்வலர் மற்றும் 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்சா மற்றும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தால், புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த தருணத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments