உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்: புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை!!உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதை தொடந்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தற்போது யூரியா 3,520 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 862 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 971 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 2,707 மெட்ரிக் டன்னும் மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உரம் வாங்க செல்கையில் தங்களின் ஆதார் அட்டையை கொண்டு உரம் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.

45 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை யூரியாவின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.266.50 மட்டுமே. மேலும், உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெற்ற உர நிறுவனங்களின் உரங்களை மட்டுமே விற்பதுடன், உரம் விற்பனை செய்ய அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விற்க வேண்டும். 

ஆகவே, சில்லரை உர விற்பனையாளர்கள் அதிகபட்ச விற்பனை விலைக்கு கூடுதலாகவோ, யூரியா உரத்துடன் வேறு ஏதேனும் இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்தாலோ, அனுமதிக்கப்படாத உர நிறுவனங்களின் உரங்களை விற்பனை செய்தாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. உர விற்பனையாளர்கள் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்தால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

இது தொடர்பான புகார்களுக்கு அந்தந்த வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள உரக் கண்காணிப்பு மையத்தினையும், புதுக்கோட்டை மாவட்ட தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் 9080709899 அல்லது 04322-221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments