ஊராட்சி செயலாளர் மாற்றப்பட்டதை கண்டித்து கறம்பக்குடியில் ஊராட்சி தலைவர்கள் சாலை மறியல்!ஊராட்சி செயலாளர் மாற்றப்பட்டதை கண்டித்து கறம்பக்குடியில் ஊராட்சி தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி அருகே உள்ள ராங்கியன் விடுதியில் ஊராட்சி செயலாளராக கரிகாலன் (வயது 45) பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கறம்பவிடுதி ஊராட்சி செயலாளராக இடமாறுதல் செய்யப்பட்டார். இதுகுறித்து ராங்கியன்விடுதி ஊராட்சி தலைவரிடம் ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் திரண்டு வந்து, ராங்கியன் விடுதி ஊராட்சி செயலாளர் மாற்றப்பட்டது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் காரணம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் நிர்வாக காரணம் என பதில் அளித்தாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறியும், ஊராட்சி தலைவர்களின் உரிமை பறிக்கப்படுவதாக தெரிவித்தும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கறம்பக்குடி - புதுக்கோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் இரு பக்கமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டு ஊராட்சி தலைவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments