கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு GPM மீடியா சார்பாக அன்பான வேண்டுகோள்: டெங்குவில் இருந்து கோபாலப்பட்டிணத்தை பாதுகாப்போம்!



கோபாலப்பட்டிணத்தை டெங்குவில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு GPM மீடியா சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில்‌ நமது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும்போது பாலித்தீன் பைகள் மூலம் வாங்குவதை தவிர்க்கவும்.

நீங்கள் வாங்கும் பைகள் அனைத்தும் தெருவோர குப்பைகளாகவும், மழைநீர் தேங்கி டெங்கு கொசு உண்டாக காரணமாகவும் அமைகிறது.

நமது ஊரில் குறைந்தது 3000 மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு வீட்டிற்கு 3-பைகள் என்று கணக்கு எடுத்துக் கொண்டாலும் நாள் ஒன்றிற்கு 9000-பைகள் சேர்கிறது. அதன்படி ஒரு மாதத்திற்கு கணக்கிட்டு கொள்ளுங்கள். எவ்வளவோ செலவு செய்யும் நாம் துணிப்பையோ, கூடையோ வாங்கி அதில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி.

டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகக் கூடியவை. 3 வாரங்கள் மட்டுமே உயிா் வாழும் இந்தக் கொசுக்கள் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கிறது.இந்தக் கொசுக்கள் பகலில் கடிக்கும். டயா், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் இக்கொசுக்கள் முட்டை வைக்கின்றன.

இந்நோயை பரப்பும் கொசுக்கள் தண்ணீரில் வளருவதால் வீட்டின் உள்ளேயும், அருகேயும் தண்ணீர் தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குப்பைகளை கண்ட, கண்ட இடங்களில் போடுதல், பொது இடங்களில் கழிவுநீர் தேங்க வைத்தல், டெங்கு கொசுக்ககள் உருவாகும் விதமாக பொருட்களை சேகரித்து வைப்பதை தவிருங்கள்.

எனவே வீட்டில் இதுபோன்ற பொருட்கள் இருந்தால் உடனே அகற்றுமாறு பொது நலன் கருதி GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:

சோா்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். ரத்தம் உறைவதற்கு முக்கிய காரணியாக விளங்கும் ரத்தத் தட்டணுக்களை டெங்கு வைரஸ் அழித்து விடும் தன்மை கொண்டது.

ரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும், ஈறு, சிறுநீா் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக் கூடும். உரிய மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்றால் உயிா் இழப்பு நேரிடலாம்.

சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாக ஓரிரு நாட்களில் குணமாகிவிடும்.

ஆனால் மலேரியா, எலிக் காய்ச்சல், டைஃபாய்டு காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகியவற்றுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். 

மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.

டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்புக் குடிநீா் மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகிய சித்த மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

டெங்குவில் இருந்து கோபாலப்பட்டிணத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.  

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோபாலப்பட்டிணத்தில் அதிகளவிலான மக்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுக்கள் குறைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். டெங்குவால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே இது போன்று உயிர் பலிகள் இனிமேல் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் டெங்கு இல்லாத கிராம்மாக கோபாலப்பட்டிணத்தை உருவோக்குவோம் என்ற உறுதிமொழி எடுப்போம்.

பொது நல கருதி வெளியிடுவது...
GPM மீடியா டீம்,
கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments