தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(RTI) கீழ் பதிலளிக்காத - ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இருவருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம்: மாநில ஆணையர் தகவல்!தமிழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 3.5 லட்சம் மனுக்கள், பல்வேறு தகவல்களைக் கேட்டு வருவதாக, மாநில தகவல் ஆணையர் ரா.பிரதாப் குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தகவல் அறியும்உரிமை சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள 2-வது மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் ரா.பிரதாப் குமார் விசாரணை நடத்தினார். 

இரண்டு மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 50 மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்ளிட்ட அதிகாரிகள்உடனிருந்தனர். தொடர்ந்து,செய்தியாளர்களிடம் மாநில தகவல் ஆணையர் கூறியதாவது:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2-வது மேல் முறையீட்டு மனுக்களை மாநில தலைமை தகவல் ஆணையரும், மாநில தகவல் ஆணையர்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறோம்.

தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 2-வது மேல்முறையீட்டு மனுக்கள் மீது இங்கு விசாரணை நடத்துகிறோம். மொத்தம் 50 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் 2-வது மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. 

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை குறைந்த அளவிலேயே மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. இம்மாவட்டத்தில் இன்னும் 20 முதல் 30 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இந்த மனுக்களும் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் 3.5 லட்சம் மனுக்கல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கேட்டு வருகின்றன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து ஆண்டு தோறும்3 லட்சம் முதல் 3.10 லட்சம் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த மனுக்களே அதிகம் வருகின்றன. 

2-வது மேல்முறையீட்டுக்கு பிறகும் முறையான தகவல்களை அளிக்க தவறினால் சம்பந்தப்பட்ட தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிப்போம். அவ்வாறு இன்றைய விசாரணையில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம் என்றார் அவர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments