முதியவருக்கு உதவுவது போல் நடித்து நூதன முறையில் ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.1¾ லட்சம் திருட்டு; வாலிபர் கைது!புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மில் சதாசிவம் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். கார்டை அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர், முதியவருக்கு உதவுவது போல் நடித்து அவரின் ஏ.டி.எம். பின் நம்பரை அறிந்துகொண்டு அவரிடம் போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு சதாசிவத்தின் ஏ.டி.எம். கார்டை திருடிக் கொண்டு சென்றுவிட்டார்.

இதனையடுத்து சிறுது நேரத்தில் சதாசிவத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர் தான் தன்னிடம் உள்ள ஏ.டி.எம் கார்டு போலியானது என்று தெரியவந்தது. 

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் விடுதி அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். 

மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தோகைமலையை சேர்ந்த ஜான் (வயது 21) என்பதும், சதாசிவத்தின் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் திருடி பணம் எடுத்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 5 செல்போன்கள் ரூ.15 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து ஜானை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments