இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 2 கோட்டைபட்டினம் மீனவர்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 2 மீனவர்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியது. இதில் விசைப்படகு தண்ணீரில் மூழ்கியது. மேலும், படகில் சென்ற ராஜ்கிரண் (வயது 30), சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் சுகந்தன், சேவியர் ஆகியோரை மீட்டனர். ராஜ்கிரணை மட்டும் மீட்க முடியவில்லை. இந்தநிலையில் கடலில் மூழ்கி பலியான ராஜ்கிரணின் உடல் கப்பல் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 2 மீனவர்களையும் விடுதலை செய்ய பல்வேறு அமைப்புகள் மற்றும் மீனவ சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 2 தமிழக மீனவர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் ஒரு சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் எனவும் இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த 4-ந் தேதி தமிழக மீனவர்கள் 2 பேரும் சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்சி டிரைவர் செல்போனிலிருந்து அவர்கள் வீட்டுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். நாங்கள் விமானம் மூலம் சென்னை வந்து விட்டோம். எங்களிடம் ஊருக்கு வர கையில் பணம் இல்லை. இந்த டாக்சி டிரைவர் தான் எங்களுக்கு ரூ.2,500 தந்து உதவினார். இன்று (அதாவது 4-ந் தேதி) இரவு ஊருக்கு வந்து விடுவோம் என்று கூறிவிட்டு போனை துண்டித்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறையினருக்கு சேவியர் மனைவி தகவல் கொடுத்துள்ளார். மீனவர்கள் தாயகம் திரும்புவது குறித்து முறையான தகவல் எதுவும் இலங்கை அரசு தெரிவிக்காததால் மீன்வளத்துறை அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர் மீனவர்கள் தொடர்பு கொள்ள அவர்களிடம் செல்போன் இல்லாததால் அவர்கள் எந்த பஸ்சில் வருகிறார்கள்? என்று தெரியாமல் மீன்வளத்துறை அதிகாரிகள் திகைத்துப்போயினர்.

பின்னர் திருச்சி பஸ் நிலையம், புதுக்கோட்டை பஸ் நிலையம், அறந்தாங்கி பஸ் நிலையம், கோட்டைப்பட்டினம் பஸ் நிலையம், கட்டுமாவடி பஸ் நிலையம் போன்ற இடங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, போலீசார் மீனவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் 2 மீனவர்களும் நாகப்பட்டினத்திலிருந்து தங்களது நண்பருக்கு அங்கிருந்த ஒரு வடமாநில நபரிடம் போனை வாங்கி நாங்கள் நாகப்பட்டினத்தில் இருக்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் பட்டுக்கோட்டைக்கு பஸ் ஏறி விடுவோம் என்று கூறி விட்டு போனைத்துண்டித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மீன்வளத்துறை இணை இயக்குனர் ஷர்மிளா பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டார். பின் அங்கு வருகிற ஒவ்வொரு பஸ்சையும் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் மீனவர்கள் இரவு 11 மணிக்கு பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் வந்து இறங்கினர்.

பின்னர் அவர்களை மீன்வளத்துறை இணை இயக்குனர் சர்மிளா அழைத்துக்கொண்டு கோட்டைப்பட்டினம் வந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தார். அப்போது, மணமேல்குடி தாசில்தார் ராஜா மற்றும் காவல்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 2 மீனவர்களையும் பார்த்ததும் உறவினர்கள் ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, மீனவர்கள் வருகை குறித்து இலங்கை அரசு, தமிழக அரசுக்கு முறையாக தகவல் அளிக்கவில்லை. இதனால்தான் மீனவர்கள் வருவது யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. அதனால் மீனவர்களை விமான நிலையத்தில் சென்று அழைத்து வர முடியாத சூழல் ஏற்பட்டது என்று கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments