ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதியம் போதுமானதா? எழும் சிக்கல்கள் என்ன? - ஓர் அலசல்




ஊராட்சி மன்ற தலைவருக்கான மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய குறைவான ஊதியம் போதுமானது இல்லை எனவும், இதுவே ஊழலுக்கு வழிவகுக்கிறது என்ற குரல்கள் எழுகின்றன.

தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன, இந்த கிராம ஊராட்சிகளின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள்தான் நேரடியாக தினமும் மக்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். கிராமப்புறங்களில் உள்ள அடிப்படை பிரச்னைகளான குடிநீர் வசதி, சுகாதாரம், கிராம சாலைகள், தெருவிளக்குகள், கழிவுநீர் நிர்வாகம் உள்ளிட்டவற்றினை கிராம ஊராட்சி அமைப்புகள்தான் நிர்வகிக்கின்றன. இதுமட்டுமின்றி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் வீட்டு வசதி திட்டங்கள், மகளிர் மேம்பாடு, ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை முறையாக கொண்டு சேர்ப்பதும் ஊராட்சி மன்ற தலைவர்களின் பணியாக உள்ளது.

எனவே, பொதுவாகவே, ஊராட்சி மன்ற தலைவர்கள் தினமும் தங்களின் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர். மேலும், ஊராட்சிகளில் உள்ள பிரச்னைகளை ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியையும் செய்கின்றனர். இத்தகைய சூழலில் இவர்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் என்பது போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து பேசுகிறார் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம், “எம்.பிக்களோ அல்லது எம்.எல்.ஏக்களோ மக்களுக்கு அருகில் இருப்பதில்லை, ஆனால் பஞ்சாயத்து தலைவர்கள்தான் மக்களுக்கு பொழுதினமும் அருகில் உள்ளனர். குடிநீர் பிரச்னையோ அல்லது கழிவுநீர் பிரச்னையோ மக்கள் இவர்களிடம்தான் முறையிடுவார்கள், இவர்கள்தான் சரிசெய்தும் தருவார்கள். அப்படியிருக்கும்போது இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது நீண்டகால பிரச்னையாக இருக்கிறது, இது தொடர்பாக பலரும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம். கேரளாவில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 15 ஆயிரத்துக்கும் மேலாக சம்பளம் கொடுக்கிறார்கள், ஆனால் இங்கு 2 ஆயிரம்தான் ஊதியம்.

திட்டங்கள் மற்றும் ஊராட்சி நிதியிலிருந்து ஊராட்சி தலைவர்கள் கமிஷன் எடுத்துக்கொள்வார்கள் என்ற மனநிலையிலேயே இந்த குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் பஞ்சாயத்து என்பது கட்சி சார்பற்ற அமைப்பாக இருப்பதால் அவர்களுக்கு கவுரமான ஊதியம் வழங்கப்பட்டால் நிர்வாகம் இன்னும் மேம்படும், தவறுகளும் குறையும். ஊராட்சி மன்ற தலைவர் அடிக்கடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லவேண்டும் அதற்கு எவ்வளவு செலவாகும், கிராமத்தினை தினமும் பார்வையிட்டாலே பெட்ரோல் செலவு எவ்வளவு என்பது நமக்கு தெரியும் அப்படி இருக்கையில் அவர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும்” என தெரிவிக்கிறார்

உள்ளாட்சி அமைப்பினை மாநில அரசு எப்படி அணுகுகிறது என்று விளக்கும் செந்தில் ஆறுமுகம், “ இதில் அடிப்படையான சிக்கல் என்னவென்றால், உள்ளாட்சி அமைப்பினை ஒப்புக்கு இருக்கும் அமைப்பினை போலவே மாநில அரசு நடத்துகிறது. மத்திய அரசு தங்களுக்கு அதிகாரம் கொடுப்பதில்லை என்று மாநில அரசு கதறும், ஆனால் அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரத்தை கொடுக்க மாட்டார்கள். உள்ளாட்சி என்பது உள் சுய ஆட்சி என்று அரசியல் சாசனம் சொல்கிறது. ஒன்றிய அரசு, மாநில அரசு, உள் சுய ஆட்சி அமைப்பு மூன்றுமே மூன்று அடுக்குகளை கொண்டது. அப்படியிருக்கையில் உள்ளாட்சிகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்குரிய அங்கீகாரத்தை கொடுக்க அதிமுக அரசோ அல்லது திமுக அரசோ விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டால் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு மரியாதை இருக்காது என்று அவர்கள் நினைக்கிறார்கள். 1996-க்கு முன்பாக உள்ளாட்சி அமைப்புகள் அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இல்லை, 1994இல்தான் தமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ்ய சட்டம் அமலுக்கு வந்தது. அதன்பின்னர்தான் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல் நடத்தவேண்டும் என்ற நிர்பந்தம் வந்தது, அந்த நிர்பந்தத்தினால்தான் மாநில அரசு உள்ளாட்சி தேர்தலையே நடத்துகிறது. இதனை தவிர்க்க ஏதேனும் வாய்ப்பு இருந்தால் இவர்கள் இந்த தேர்தலையே நடத்த மாட்டார்கள், சிறப்பு அதிகாரிகளை வைத்தே சமாளித்துக்கொள்வார்கள்.

அதுபோல கிராம ஊராட்சிகளுக்கு எப்போது எந்த நிதி விடுவிக்கப்படும் என்று கேரள மாநில அரசு முன்கூட்டியே பட்ஜெட்டில் தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் எப்போது எந்த நிதி கிடைக்கும் என்றே ஊராட்சிகளுக்கு தெரிவிக்கப்படுவதில்லை, அதனால் முறையாக திட்டமிட முடியாமல் இங்கு தவிக்கிறார்கள்.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமான வெறும் 2 ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு எப்படி அவர்களால் செயல்பட முடியும், எனவே செயல்பட வேண்டும் என்றால் தவறான வழியில்தான் எடுக்கலாம். இவ்வாறு ஒரு பொறிக்குள் ஊராட்சி மன்ற தலைவர்களை எந்த கேள்வியும் கேட்காத வகையில் சிக்கவைக்கவே இதுபோல செய்யப்படுகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. எம்.எல்.ஏக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது, இது கவுரவமான சம்பளம், இந்த சம்பளத்தை கொண்டே எந்த தவறுகளிலும் ஈடுபடாமல் நேர்மையாக செயல்படும் சில எம்.எல்.ஏக்களும் இருக்கவே செய்கின்றனர். அதுபோல ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்பட்டால் மொத்தமுள்ள 12,525 பேரில் சில ஆயிரம் பேராவது நேர்மையாக செயல்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

இதுகுறித்து பேசும் சமூக செயற்பாட்டாளர் கரிகால்சோழன், “ அந்த காலத்தில் நில சுவான்தாரர்கள், பண்ணையார்கள் போல பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த காரணத்தால் அவர்களுக்கு ஐந்து ரூபாய், 10 ரூபாய் என மதிப்பூதியம் கவுரவ தொகையாக வழங்கப்பட்டது. அதேபோலவே இப்போதுவரை மிகக்குறைவான தொகையையே அவர்களுக்கு ஊதியமாக வழங்குவது சரியானது இல்லை. தற்போது 2 ஆயிரம் மதிப்பூதியம் வழங்குகிறார்கள், இரண்டுமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றாலே இந்த தொகை காலியாகிவிடும். இதுபோல குறைவான ஊதியம் வழங்கப்படுவதாலேயே அவர்கள் வேறு வழியின்றி பல திட்டங்களில் முறைகேடுகள் செய்கின்றனர்.

எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் போலவே ஊராட்சி மன்ற தலைவர்களும் தேர்தல் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களைவிடவும் அதிக வேலை செய்பவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள்தான். அப்படி இருக்கையில் அவர்களுக்கு வழங்கப்படுவதுபோலவே இவர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். தற்போது நேர்மையாக செயல்படவேண்டும் என்ற எண்ணம் கொண்ட தலைவர்கள் கூட செயல்பட முடியாத சூழல்தான் நிலவுகிறது. எனவே ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்கப்பட்டால் உள்ளாட்சி அமைப்புகளில் பல முறைகேடுகள் குறையும், நிர்வாகமும் மேம்படும். அதுபோல ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படவேண்டும்” என தெரிவிக்கிறார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments