இலங்கை கப்பல் மோதி கோட்டைபட்டினம் மீனவர் பலியான சம்பவம்: அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு முடிவு!



இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் புதுக் கோட்டை மீனவர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச்சேர்ந்த பிருந்தா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர் ராஜ்கிரண். இவருடன் சுகந்தன், சேவியர் என 3 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கடந்த 19-ந்தேதி நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, இவர்களின் படகின் மீது ரோந்துக் கப்பலை மோதச்செய்துள்ளனர். இதில் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

அவர்களில் சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். எனது கணவர் ராஜ்கிரண் 2 நாட்களுக்கு பின்பு பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தனர். ஆனால் எங்களிடம் கூட எனது கணவர் உடலை காண்பிக்காமல் அடக்கம் செய்துவிட்டனர். 

இதனால், அவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தில் அவரின் முகம், உடலில் காயங்கள் இருந்தன.

எனவே இது குறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், எனது கணவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும், உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு முறையிடப்பட்டது.
இதையடுத்து நிர்வாக நீதிபதியிடம் உரிய அனுமதி பெற்று வருகிற 15-ந்தேதி விசாரணை பட்டியலில் இந்த வழக்கை சேர்க்கும்படி ஐகோர்ட்டு பதிவாளருக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments