மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அரசுப் பள்ளி மீண்டும் திறப்பு! மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேச்சு!!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம் அல்லம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 3 ஆண்டுக்கு முன்னர் மாணவர்கள் இன்றி செயல்படாமல் இருந்தது.

தற்போது அந்த ஊரை சேர்ந்த பெற்றோர்கள் அப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்க விரும்பினர். இதற்கான மாணவர் சேர்க்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து கல்வி அதிகாரி பேசியதாவது:- அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று சாதனையாளராக இருக்கிறார்கள். மாணவர்கள் எந்த கல்வி நிறுவனத்திலும் பயின்றாலும் அவர்கள் பெறும் கல்வி ஒன்று தான். தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு நிறைய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, பெற்றோர்களாகிய நீங்கள் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும். அரசுப்பள்ளியை மேம்படுத்துவதற்கு நல்ல ஆலோசனைகளையும் வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பள்ளியில் புதிதாக சேர்ந்த 5 மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், காலணிகள், விலையில்லா புத்தகப் பை போன்றவற்றை அவர் வழங்கினார். பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் வாங்கி வந்த இனிப்பு, எழுதுபொருட்களையும் மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments