கிராமம் முழுவதும் கழிப்பறைகள் கட்டக் காரணமான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி


விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பைப் பெற்ற பள்ளி மாணவி, தனக்கு உதவி செய்ய வந்த தொண்டு நிறுவனத்தினரை தனது கிராமத்துக்கே கழிப்பறைகளைக் கட்ட வைத்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் க. ஜெயலட்சுமி. இப்போது புதுக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்.

வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி, கடந்த 2019 ம் ஆண்டு ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்த போது, விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்குச் செல்வதற்கான தனியார் நிறுவன வாய்ப்பைப் பெற்றார்.

அப்போது அவருக்கு ரூ. 1.69 லட்சம் நிதி தேவைப்பட்டது. புதுக்கோட்டையின் சமூக ஆர்வலர்கள் பலரும் நிதியை வாரி வழங்கினர். தேவைக்கும் அதிகமாகவே நிதி சேர்ந்த நிலையில், திருச்சியிலுள்ள கிராமாலயா தொண்டு நிறுவனத்தினரின் தொடர்பும் கிடைத்துள்ளது. அவர்கள் ஜெயலட்சுமியின் உடைந்த வீட்டைக் கட்டித் தரவோ, வீட்டில் கழிப்பறை கட்டித் தரவோ முன்வந்தனர்.

ஆனால், தனக்கென எதுவும் வேண்டாம், தனது கிராமத்துக்கு கழிப்பறை கட்டித் தாருங்கள் எனக் கோரிக்கை வைத்தார் ஜெயலட்சுமி.
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கும் திருவள்ளுவர் நகர், காலத்தால் சில பத்தாண்டுகள் பின்தங்கிய பகுதி.

முந்திரிக் காய்களை வாங்கி வந்து சாலையோரத்தில் அவற்றை வறுத்து விற்பனை செய்யும் கூலித் தொழிலாளர்களைக் கொண்ட பகுதி.

கிராமாலயா நிறுவனத்தின் நிறுவனர் தாமோதரன் தலைமையிலான குழுவினர் ஜெயலட்சுமியின் வேண்டுகோளை ஏற்று, ஆதனக்கோட்டைக்கு வந்து பார்வையிட்டனர்.

தலா ஒரு கழிப்பறைக்கு ரூ. 20 ஆயிரம் என்ற அளவில் அமெரிக்க வங்கியின் நிதி ஏற்பாட்டுடன், திருவள்ளுவர் நகர், அம்மன்கோவில் தெரு, கண்டியன்பட்டி ஆகிய மூன்று தெருக்களில் 126 கழிப்பறைகள் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டன.

உறிஞ்சுகுழி மாதிரி என்றழைக்கப்படும் மிகக்குறைந்த செலவில் பல ஆண்டுகள் பயன்தரும் வகையிலான கழிப்பறைகள் அவை.

கழிப்பறை அப்பகுதி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு சில மாதங்கள் கடந்த நிலையில், அப்பகுதி மக்கள் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் ஜெயலட்சுமியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments