விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குக: அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமசந்திரன் கோரிக்கை!!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் விடுபட்டுள்ள 89 கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குமாறு அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமசந்திரன் துறை தலைமை செயலாளர் சமயமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்தபின் ஏக்கருக்கு 465 ரூபாய்  பணம் செலுத்தி பயிர் காப்பீடு செய்கின்றனர். இத்தோடு மாநில அரசின் சார்பாக ஏக்கர் ஒன்றுக்கு 1200 ரூபாய் மற்றும் ஒன்றிய அரசின் சார்பாக 1800 ரூபாய் சேர்த்து ஆக மொத்தத்தில் விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விளைச்சலுக்காக 3465 ரூபாய் செலுத்தி பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. மேற்கண்ட 3465 ரூபாய் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் ஒப்புதலோடு தனியார் காப்பீடு நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன. 

விவசாய நிலங்களில் பயிர் அறுவடை செய்யும் போது ஒன்றிய அரசின் புள்ளியல் துறையும் மாநில அரசின் வருவாய் துறையும் பயிர் விளைச்சல்களை கணக்கிட்டு பாதிப்பின் அளவை சம்பந்தப்பட்ட மாவட்ட மாநில மற்றும் ஒன்றிய அரசு உட்பட சம்பந்தப்பட்ட தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். அதனடிப்படையில் எந்த அளவு பயிர் விளைச்சல் குறைவு என்பதை சதவிகிதம் அடிப்படையில் கணக்கிட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 

இந்த முறையில் கடந்த 2018-2019 ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் 519 கோடி ரூபாய் காப்பீடு தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த 2020-2021 ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து 1564 கோடி ரூபாய் மட்டுமே காப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி தொகுதியில் ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களில் 89 கிராமங்களுக்கு காப்பீடு தொகை வரவுவைக்காமல் விடுபட்டுள்ளது. இதில் மணமேல்குடிஒன்றியத்தில் மட்டும் 54 கிராமங்கள் விடுபட்டு உள்ளது. 

எனவே மணமேல்குடி ஒன்றிய அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம் தேதி சாலை மறியல் அறிவித்தனர். இதன் காரணமாக கடந்த 1ம் தேதி மணமேல்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  சமாதான கூட்டத்திற்கு துறை அதிகாரிகள் பங்கேற்காததால் 17ம் தேதி சமாதான கூட்டம் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என்பதால் அனைத்து விவசாய சங்கங்களின்  விவசாயிகளும் மணமேல்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். 

இதற்கிடையில் அறந்தாங்கி தொகுதியில் அனைத்து விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  ராமசந்திரன் சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று தமிழக அரசின் வேளாண்மை  மற்றும்  உழவர் நலன் துறை செயலாளர் சமயமூர்த்தியிடம் அறந்தாங்கி தொகுதியில் பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் விடுபட்டுள்ள 89 கிராமங்களில் பெயர் பட்டியலை கொடுத்து விரைவாக உரிய காப்பீடு தொகை வழங்குமாறு கோரிக்கை மனுவை கொடுத்தார். 

மனுவை பெற்றுக்கொண்ட தமிழக அரசின் வேளாண்மை  மற்றும்  உழவர் நலன் துறை செயலாளர் சமயமூர்த்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ ராமசந்திரனிடம் கூறினார். அறந்தாங்கி தொகுதிவிவசாயிகளின் நலன் கருதி துரிதமாக செயலாற்றிய எம்.எல்.ஏ ராமசந்திரனுக்கு விவசாயிகள் நன்றி கூறி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments