நூற்பாலையில் இளம்பெண் மீது தாக்குதல் : மேலாளர், விடுதி காப்பாளர் கைது




கோவை உடையாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் தொழிலாளர்களும், வெளியூர்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நூற்பாலையில் பணிக்காக வந்த இளம்பெண் ஒருவரை, அதே நூற்பாலையில் பணிபுரியும் இருவர் கட்டையால் கொடூரமாகத் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.


இதையறிந்த கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சரவணம்பட்டி போலீஸாருக்கு நேற்று உத்தரவிட்டார். கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் தங்கதுரை சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஆய்வாளர் எல்.கந்தசாமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து நூற்பாலைக்கு வேலைக்காக வந்த பெண்ணைக் கடுமையாகத் தாக்கியதாக நூற்பாலையின் மனிதவள பிரிவு மேலாளர் முத்தையா (46), மகளிர் விடுதி காப்பாளர் லதா (39) ஆகியோரை நேற்று கைது செய்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “தாக்குதலுக்குள்ளான 18 வயது இளம்பெண், கடந்த ஒரு வாரமாக நூற்பாலைக்கு வேலைக்கு வராமல், விடுதியிலேயே தங்கியிருந்துள்ளார். கடந்த 27-ம் தேதி விடுதி காப்பாளர் லதா இதுபற்றி அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது லதாவை அப்பெண் தள்ளி விட்டதாக கூறுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே வாக்குவாதம் ஏற்பட்டு, முத்தையா மற்றும் லதா இருவரும் அப்பெண்ணைத் தாக்கியுள்ளனர். இதற்காக இருவர் மீதும் அவதூறாக பேசுதல், ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது” என்றனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments