ஊதியத்தை நிறுத்தி வைக்க நேரிடும்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளுக்கு கருணை காட்ட முடியாது ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது என்றும், அவர்களது ஊதியத்தை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

அறிக்கை தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்து இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தீவிர நடவடிக்கை

அப்போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நீர்நிலைகளை பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நீர்வள ஆதாரங்களை பெருக்கி வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கான நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்ஜியம் என மாற்றப்பட்டுள்ளது. நீர்நிலைகளை பதிவுசெய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர்நிலைகளில் உள்ள கட்டுமானங்களுக்கு மின்இணைப்பு மற்றும் திட்ட அனுமதி வழங்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் உதவி

நீர்வள மேம்பாட்டுக்காக தனித்துறையே உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஜூலை மாதம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சிறு குட்டைகள் மற்றும் குளங்களை உள்ளூர் விவசாயிகள், இளைஞர்களின் உதவியுடன் மீட்டு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அர்ப்பணிப்பு

நீர்நிலை ஆக்கிமிப்புகளை அகற்றவது மட்டுமின்றி, அவற்றை பழைய நிலைமைக்கு கொண்டுவர தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையை பொறுத்தமட்டில் நீர்நிலை ஆதாரங்களில் நீர் இருப்பு திறமையாக கையாளப்பட்டு, மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாதபடி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஆயிரம் மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழக அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது,

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

கருணை இல்லை

இதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள்,

இந்த அறிக்கை சம்பிரதாயத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-

அறிக்கையில் எந்த விவரமும் இல்லை. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்த எந்த ஒரு அதிகாரியும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது. அவர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும்.

நீர்நிலைகள் எங்கெங்கு உள்ளது? என்பது குறித்த விவரம் தெரிந்தால் தான், அதில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய முடியும். அந்த விவரம் இந்த அறிக்கையில் இல்லை.

மன்னிக்க முடியாது

எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர்நிலைகள் உள்ளன?. அதன் சர்வே எண்கள் என்ன?. அதன் பரப்பளவு என்ன? என்பது குறித்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த அறிக்கை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியைத்தான் காட்டுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 57 ஆயிரத்து 688 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் 8 ஆயிரத்து 797 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரையும் மன்னிக்க முடியாது. அறையில் சும்மா உட்கார அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவி்ல்லை.

அரசை குறைகூற முடியாது

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராக உத்தரவிடுவோம்.

அதன்பிறகும் இதே நிலை தொடர்ந்தால் அவர்களின் ஊதியத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட நேரிடும். அதிகாரிகள் செய்யும் தவறுக்காக தமிழக அரசை குறைகூற முடியாது.

அதிகாரிகள் பொறுப்பு

தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கும், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கும் அதிகாரிகள்தான் பொறுப்பு. ஏனென்றால் அவர்கள் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

பின்னர், இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வருகிற 16-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments