மாவட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ.வினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், இந்திய மாணவர் சங்கத்தினர், இளைஞர் மன்றத்தினர், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சின்னதுரை எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது புதிய பஸ் நிலையம் நுழைவுவாயில் முன்பு சாலையின் குறுக்கே எம்.எல்.ஏ.வின் கார் மற்றும் இன்னொரு காரை நிறுத்தி எந்த வாகனங்களும் செல்ல முடியாத சூழலை ஏற்படுத்தினர். இதேபோல சரக்கு வேன்களையும் சாலையில் நிறுத்தியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆலங்குடியில் காமராஜர் சிலை, பஸ் நிலையம், வடகாடு முக்கம், சந்தைப்பேட்டை, அரசு மருத்துவமனை முன்பு என 5 இடங்களில் சாலையின் குறுக்கே நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கந்தர்வகோட்டை பஸ் நிலையம் உள்பட 7 இடங்களில் இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அன்னவாசல், மேலூர், சத்தியமங்கலம், குடுமியான்மலை, பரம்பூர், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சி.ஐ.டி.யூ. இந்திய தொழில் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு உள்பட 6 இடங்களில் பெட்ரோல்-டீசல்-கியாஸ் விலை உயர்வை கண்டித்து மறியல் நடைெபற்றது.

காரையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் சி.ஐ.டி.யூ. வினர் மறியலில் ஈடுபட்டனர். சடையம்பட்டியில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர். திருவரங்குளம் கடைவீதியில் சி.ஐ.டியூ. தொழிற்சங்கத்தினர் செந்தமிழ்செல்வன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவுடையார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் எம்.எஸ்.கலந்தர் தலைமையில் பஸ் பயணிகளிடமும், வாகன ஓட்டிகளிடமும் துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments