திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பஸ் தீப்பிடித்த சம்பவத்தில் பலியான வாலிபர்களின் அடையாளம் தெரிந்தது திருமண விழாவில் பங்கேற்க சென்ற போது விபத்தில் சிக்கினர்
திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பஸ் தீப்பிடித்ததில் பலியான 2 வாலிபர்களின் அடையாளம் தெரிந்தது. திருமண விழாவில் பங்கேற்க சென்ற போது, அவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.


பஸ் தீப்பிடித்தது 
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பாம்பாறு பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சில் ஏற்பட்ட உராய்வில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ பஸ்சுக்குள் பரவ ஆரம்பித்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் அனைவரும் கீேழ இறங்கி விட்டதால் அவர்கள் எல்லோரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
தகவல் அறிந்த திருமயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் உடல் நசுங்கியும், மற்றொருவர் தீயில் எரிந்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முதல் கட்ட விசாரணையில்இறந்தவர்கள் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
இறந்தவர்கள் விவரம் தெரிந்தது
இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டுத்தலைவாசலை சேர்ந்த கலையரசன் மகன் மணிகண்டன் (வயது 22) என்பதும், இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார் என்பது தெரியவந்தது. 
மற்றொருவர் புதுக்கோட்டை மாவட்டம், வளவம்பட்டி ஊராட்சி சின்னையாசத்திரம் ராஜாங்கம் மகன் செல்வம் (21) என்றும், அவர் சென்டிரிங் தொழில் செய்து வந்தார். இருவரும் காரைக்குடியில் 12-ந்தேதி நடைபெற்ற திருமணவிழாவில் பங்கேற்க புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் இறந்துள்ளது தெரியவந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments