மணமேல்குடி, வடகாடு, சூரன்விடுதியில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை




மணமேல்குடி, வடகாடு, சூரன்விடுதியில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் ேமற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் பழைய சமையல் கூடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன.

பள்ளிக்கட்டிடத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேலே தண்ணீர் தேங்கி நின்று வடிகிறது.

புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் அருகே உள்ள ஓட்டு கட்டிடத்தில் தற்காலிக பராமரிப்பு செய்து மாணவர்கள் அமர வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு உணவுக்கூடம் கிடையாது. இந்த பள்ளி கட்டிடத்தின் நிலை குறித்து பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாண்மை குழு சார்பில் மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை அலுவலர்களுக்கு பல முறை மனு கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கஜா புயல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வீசிய கஜா புயலில் சிக்கி வடகாடு, சூரன்விடுதி, ஆலங்காடு போன்ற பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளின் கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிடங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் அபாயகரமான நிலையிலேயே உள்ளன. எனவே இதன் மூலம் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த கட்டிடங்களை இடித்து அகற்றி புதிய கட்டிடங்களை கட்டித்தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விருந்தினர் மாளிகை

ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பழுதடைந்த விருந்தினர் மாளிகை உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த கட்டிடத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது அவ்வப்போது மழை பெய்வதால் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன்பு இந்த விருந்தினர் மாளிகையை இடிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments