கொரோனா அறிகுறி உள்ளவர்களை பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்த வேண்டும்




கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு, பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-

அதிகம் பரவுகிறது...

தமிழகத்தில் பொது இடங்கள், திருவிழா கூட்டங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், கடை வீதிகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றாமல் மக்கள் இருந்து வருகின்றனர். உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. மேலும் டெல்டா வகை கொரோனா வைரசும் தற்போது பரவலாக பரவி வருகிறது.

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனமும், மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்டவைகளை முறையாக பின்பற்றுவதன் மூலமும், கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் நடவடிக்கைகளில் ஒரு மாற்றம் ஏற்படுவதன் மூலமுமே இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றன.

அறிகுறிகள் குறைவு

அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவதையும், தடுப்பூசி போடுவதையும் உறுதிசெய்ய வேண்டும். மேலும் மருத்துவ கல்லூரிகள், ஆஸ்பத்திரிகளில் ஊழியர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள், அங்கு வரும் நோயாளிகள் என பலர் முககவசம் அணிவதை தவிர்க்கின்றனர். மேலும் சில ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டு மற்றும் ஒமைக்ரான் வார்டுகளில் போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் குறைவாகவே காணப்படுகிறது. சிலருக்கு அறிகுறிகள் தென்படுவதே இல்லை. இதனால் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தெரியாமலே பரப்பும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் ஆஸ்பத்திரிகளில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுடன் முககவசம் இல்லாமல் சந்திக்க நேரும்போது வைரஸ் தொற்று பரவ அதிக வழிவகுக்கிறது.

முதற்கட்ட ஆய்வில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், காற்றோட்டம் இல்லாத இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும்போதுதான் அதிகம் பரவியதாக தெரியவந்துள்ளது.

ஆஸ்பத்திரியில் தயார் நிலை

ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்கள் தற்போது நலமுடன் இருந்து வருகின்றனர். ஒமைக்ரான் தொற்று அதிகம் பரவும் தன்மை உள்ளது. இதனால் பலருக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நமது பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் விட்டுவிட கூடாது. எனவே பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் கொரோனா பரவலை தடுக்க, கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் முடிவு வரும் வரை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஏற்கனவே கூறியதுபோல ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்தையும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும், கூட்டங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட வேண்டும். கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகள், ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட தெருக்கள் அல்லது பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வெளிநாட்டு பயணிகள்

மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்து வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களை தொடர்ந்து பின்பற்றி அவர்களது உடல்நிலை குறித்து அறிய வேண்டும். அதில் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாமல் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிப்புக்கான மூலக்காரணம் குறித்து கண்டறியப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments