சிறப்பான சுகாதார செயல்பாட்டில் 2-வது இடத்தில் தமிழ்நாடு
சிறப்பான சுகாதார செயல்பாட்டில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருப்பதாக ‘நிதி ஆயோக்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளா முதல் இடத்திலும், உத்தரபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

நிதி ஆயோக் தயாரிப்பு

2019-2020 ஆண்டில் ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை தரவரிசைப்படுத்தி, மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு பட்டியல் தயாரித்துள்ளது. சுகாதார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவுகோல்கள் அடிப்படையில் 4-வது ஆண்டாக இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்தும், உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடனும் பட்டியல் தயாராகி உள்ளது.

கேரளா, தமிழ்நாடு

இந்த பட்டியலில், பெரிய மாநிலங்களிடையே ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டில், தொடர்ந்து 4-வது ஆண்டாக கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது.

ஆனால், 2018-2019 ஆண்டில் இருந்து சுகாதார செயல்பாட்டை அதிகரித்தவகையில் பெரிய மாநிலங்களிடையே கேரளா 12-வது இடத்துக்கும், தமிழ்நாடு 8-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசம், டெல்லி

இந்த பட்டியலில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. பீகார், மத்தியபிரதேசம் ஆகியவை கடைசிக்கு முந்தைய 2 இடங்களில் உள்ளன. ராஜஸ்தானும் மோசமான இடத்தில் உள்ளது. இருப்பினும், முந்தைய ஆண்டில் இருந்து செயல்பாட்டை அதிகரித்தவகையில், உத்தரபிரதேசம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சிறிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில், ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் மிசோரம், திரிபுரா ஆகியவை முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.

யூனியன் பிரதேசங்களிடையே டெல்லி, காஷ்மீர் ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன. ஆனால், முந்தைய ஆண்டில் இருந்து செயல்பாட்டை அதிகரித்தவகையில் முதல் இடங்களை பிடித்துள்ளன
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments