மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்




புதுக்கோட்டை அருகே மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது தலையில் குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி தளம்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பயிற்சி மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில் திருச்சி விமானநிலையத்தில் பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பசுமலைப்பட்டியில் 2 நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள மாவட்ட போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதில் மொத்தம் 34 பேரில் பகுதி, பகுதியாக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு திட்டமிட்டிருந்தனர். பசுமலைப்பட்டியில் நேற்று முன்தினம் ஒரு பகுதியினர் துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்தனர்.

சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு

இந்த நிலையில் நேற்று காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு குண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவிற்கு பாய்ந்து சென்றது. அந்த குண்டு நார்த்தாமலையில் உள்ள ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின் (வயது 11) தலையின் இடதுபுறத்தில் பாய்ந்தது. அந்த குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து சிறுவன் மயக்கமடைந்து விழுந்தான். தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.

இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றம்

சிறுவனுக்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் சி.டி. ஸ்கேன் எடுத்து பரிசோதித்தனர். இதில் தலையில் பாய்ந்த குண்டு மூளைக்கு அருகாமையில் இருந்தது தெரியவந்தது. இதனை உடனடியாக அகற்ற வேண்டிய நிலை இருந்தது. இதற்கு கூடுதலான வசதி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் இருந்ததால் ஆம்புலன்சில் சிறுவன் புகழேந்தி அங்கு அனுப்பி வைக்கப்பட்டான்.


அவனுடன் மருத்துவக்குழுவினரும் சென்றனர். தஞ்சாவூர் மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்த குண்டை அகற்றினர். தொடர்ந்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளான்.

சாலை மறியல்

இதற்கிடையில் குண்டடிபட்டு சிறுவன் படுகாயமடைந்தது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள், குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு விரைந்து வந்தனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனை கண்டித்தும் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு தடைகோரியும் நார்த்தாமலையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்த பின் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.


தற்காலிக தடை

சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் எதிரொலியாக துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கிடையே சம்பவஇடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பைனாகுலர் மூலம் தொலைதூரத்தை பார்வையிட்டார். துப்பாக்கி சுடும் பயிற்சியில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவனது உடல்நிலை பற்றி 24 மணி நேரத்திற்கு பின்னர் தான் தெரியவரும் எனக்கூறப்படுகிறது. பசுமலைப்பட்டியில் இதற்கு முன்பு கடந்த 2001-ம் ஆண்டு இதேபோல ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் காயமடைந்து அறுவை சிகிச்சைக்கு பின் நலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசாரின் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னதுரை கூறுகையில்" இந்த சம்பவம் மிகவும் கவலை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தபோது இந்த பயிற்சி தளத்தை மூடவேண்டும் என கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த மையத்தை நிரந்தரமாக மூட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு அரசு தேவையான உதவிகளை உடனே செய்ய வேண்டும்" என்றார். பொதுமக்கள் கூறுகையில், நார்த்தாமலைப்பகுதி மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.

சம்பவம் நடந்தது எப்படி? நிபுணர்கள் குழு ஆய்வு

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மலைகளை தாண்டி குண்டு பாய்ந்து வந்தது எப்படி? என்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 2 குண்டு பாய்ந்ததில் ஒன்று வீட்டின் மேல் பகுதியிலும், மற்றொன்று சிறுவனின் தலையிலும் பாய்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பயிற்சி தளத்தில் இருந்து குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் தாண்டி வந்தது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்த பின்னர் தான் முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் விசாரணை?

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களில் ஒருவர் சுட்ட குண்டு தான் இவ்வளவு தூரம் தாண்டி சிறுவனின் தலையை துளைத்தது. அந்த குண்டை சுட்ட நபர் யார்? என்பது கண்டறியப்பட வேண்டி உள்ளது. போலீசாருக்கு பெரும் சவாலாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. வருந்தத்தக்க விஷயம் என்றாலும் உயிர் பாதுகாப்பில் சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளதால் நேற்றைய தினம் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பட்டியலை போலீசார் பெற்று விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

இது முதல் சம்பவம் அல்ல...

சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் முதல் முறையல்ல, இதற்கு முன்பு இதே போன்று சம்பவம் நடந்துள்ளது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் பகுதிநேர எழுத்தராக பணியாற்றி வந்த விளாத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கடந்த 2001 டிசம்பர் மாதம் 29-ந் தேதி ஊரப்பட்டி என்ற இடத்தில் சில நபர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நெஞ்சின் இடதுபுறம் துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே மயங்கி விழுந்தார். பின்னர் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு 4 நாட்கள் கழித்து தோட்டோ நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதிக்கு வந்துள்ளதாக கூறி ஆபரேஷன் செய்தும், தோட்டாவை எடுக்க முடியவில்லை. பின் 6 நாட்கள் கழித்து வயிற்றின் பின்பகுதியில் ஆபரேஷன் செய்தும் தோட்டாவை எடுக்க முடியவில்லை. 10 நாட்கள் ஆகியும் தோட்டாவை எடுக்க முடியாத சூழ்நிலையில் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவரது முதுகில் இருந்து தோட்டா எடுக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments