கோட்டைப்பட்டினம் பகுதியில் துணிகரம்: பர்னிச்சர் கடையை உடைத்து பொருட்கள் திருட்டு! மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!கோட்டைப்பட்டினத்தில் பர்னிச்சர் கடையில் பொருட்கள் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்தவர் தோப்பு முகமது. இவரது மகன் கலந்தர்  (வயது 27). இவர் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பர்னிச்சர் கடையின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ள காட்சி

பின்னர் வழக்கம்போல் நேற்று காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் கண்ணாடி கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, கடையின் உள்ளே இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
பாலத்தில் விட்டுச்சென்ற எலக்ட்ரானிக் பொருட்களை போலீசார் கைப்பற்றியபோது

இதுகுறித்து கலந்தர் கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடை அமைந்துள்ள பகுதியை சுற்றி சோதனையிட்டனர். அப்போது, கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலத்தின் கீழே சென்று பார்த்தபோது அதில் இரண்டு டி.வி.க்கள் மற்றும் சில பர்னிச்சர் பொருட்கள் கிடந்தது. உடனே அதனை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்னிச்சர் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்கள் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து பாதி பொருட்களை பாலத்தில் விட்டுச் சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments