கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் விசைப்படகு பறிமுதல்
கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதாக மீன்வளத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று மீன்வள துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் மற்றும் அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு விசைப்படகில் கரையோரத்தில் மீன் பிடித்ததை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் கரையில் மீன்பிடித்த விசைப்படகு மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய வலைகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் கூறுகையில், விசைப்படகுகள் கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்பது விதி. கரை பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் தான் மீன் பிடிக்க வேண்டும். ஆனால் அதனையும் மீறி சில விசைப்படகுகளில் கரை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் வகையில் கரை பகுதியில் மீன் பிடிக்கும் விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசைப்படகு மீனவர்கள் எக்காரணம் கொண்டும் இரட்டை மடி வலை பயன்படுத்தி மீன்கள் பிடிக்க கூடாது. கரை பகுதியில் மீன்கள் பிடிக்க கூடாது. மீறினால் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். கடலுக்கு செல்லும் நபர்கள் மீனவர் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். சில நபர்கள் அடையாள அட்டை இல்லாமல் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். சோதனையின்போது அடையாள அட்டை இல்லாமல் மீன் பிடித்தால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments