அடுத்த 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அடுத்த 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,முன்னதாக ஞாயிற்றுக்கிழமையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில்,மக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கினர். குறிப்பாக,ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டினர்.

இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும்,தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி,மக்களும் அதிக அளவில் வருகை புரிந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.அந்த வகையில்,இதுவரை 15 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அடுத்த 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாலரெங்காபுரம் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு சென்றார்.

அங்கு மேம்படுத்தப்பட்ட வெளிப்புற கோபால்ட் 60 அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், மருத்துவத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் கணேஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.

அதன்பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை புதிய அரசு ஆஸ்பத்திரியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதுகு தண்டுவட காய படுக்கைப்புண் சிகிச்சை வார்டு தொடங்கி வைத்தார். பின்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மாடித்தோட்ட வளாகம் திறந்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரி கூட்டரங்கில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 19 பிரிவுகளின் கீழ் பட்டப்படிப்பு படிப்பதற்காக 64 ஆயிரத்து 900 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து உள்ளன. தமிழக அரசு கல்லூரிகளில் 2676 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 13 ஆயிரத்து 832 இடங்களும் உள்ளன. இதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தப்படும். அடுத்தபடியாக பொதுப்பிரிவினருக்கு கவுன்சிலிங் தொடங்கும்.

தென் தமிழகத்தில் முதல் முறையாக ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி அமைக்கப்பட்டு உள்ளது. இது தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. அதே போல எலும்பு தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்.

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கி, புற்றுநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, விபத்து காயம் ஆகிய அம்சங்களில் எலும்பு வங்கியின் பயன்பாடுகள் உதவியாக அமையும். இறந்தவர்களிடம் இருந்து 14 மணி நேரத்துக்குள் எலும்புகளை அகற்றி பதப்படுத்தி பத்திரப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எலும்புகளை 5 ஆண்டுகள் வரை சேமித்து வைக்க முடியும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செயற்கை கால்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு செயற்கை கால்கள் வேண்டும் என்றால் பெங்களூரு, கோவை செல்ல வேண்டி வரும். ஆனால் இன்றைக்கு மதுரையில் செயற்கை கால்கள் தயாரிப்பதற்கான பிரத்யேக பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக 3 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மையம் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சம் ஊழலில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நிர்வாக ரீதியாக மட்டுமன்றி சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் வேலைபார்க்கும் தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2000 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்காலிக ஊழியர்களுக்கு பணி இழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மதுரையில் தடுப்பூசி போடுவது என்பது இயக்கமாகவே உருமாறி வருகிறது. தமிழகத்தில் 84 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். இரண்டு தவணையாக 55.1 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 37 மாவட்டங்களில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, மதுரை ஆகிய இடங்களில் தடுப்பூசி சதவீதம் குறைவாக உள்ளது.

மதுரையில் 77 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 41.85 சதவீதம் பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட்டுக்கொண்டு உள்ளனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 13 சதவீதம் இடைவெளி உள்ளது. தமிழகம் முழுவதும் வீடு தேடிச்சென்று தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

மெகா முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் பொதுமக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு தயக்க நிலை ஏற்பட்டு உள்ளது வருத்தம் தருகிறது. மதுரைக்காரர்கள் வீரம், விவேகம், அறிவு நிறைந்தவர்கள். அவர்கள் தடுப்பூசி வி‌ஷயத்திலும் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வருகிற சனிக்கிழமை கிறிஸ்துமஸ் திருநாள். எனவே அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை முகாம் நடத்தப்படும். இதேபோல ஜனவரி 1-ந்தேதி சனிக்கிழமை. எனவே அன்றைக்கு பதில் மறுநாளான ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா விதிமுறைகளை தமிழக முதல்வர் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 43 பேருக்கு மரபியல் மாற்றம் தொடர்பான நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 98 பேருக்கும் அரசு தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பல்வேறு கடிதங்களை எழுதி உள்ளார். இங்கு 50 மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

11 மருத்துவக் கல்லூரிகளில் 1450 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. இந்த கல்லூரிகள் வருகிற 12-ந்தேதி திறந்து வைக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விருதுநகரில் எந்த இடத்தில் நிகழ்ச்சி நடக்கும்? என்பது தொடர்பாக பிறகு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு மா.சுப்பிரமணியன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கல்விசார் மைய கட்டிட பணிகளை பார்வையிட்டார். அப்போது பணிகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன்பிறகு தமிழக சுகாதார அமைச்சரின் கார் செல்வோருக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு உள்ள அரசினர் ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சித்த மருத்துவ சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தை தொடங்கி வைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments