“முன் மாதிரி கிராம விருது” ரூ.3.22 கோடி ஒதுக்கி அரசாணை: தமிழக அரசு உத்தரவு!



முன் மாதிரி கிராமமாக தேர்வாகும் கிராமங்களுக்கு பரிசு வழங்குவதற்காக ரூ.3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் 24.8.21ல் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, ‘சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் முன் மாதிரி கிராம விருது தோற்றுவிக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கி கவுரவிக்கப்படுவதுடன் விருதிற்கான கேடயமும், தலா ரூ.7.50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

மேலும் மாவட்ட அளவிலான விருதுகளுடன், சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன் மாதிரி கிராம விருது வழங்கி அதற்கான கேடயமும் தலா ரூ.15 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்’ எனத்தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இயக்குநர், அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘முன்மாதிரி கிராமம் என்பது கிராமத்தின் ஒட்டுமொத்த தூய்மையை அடைவதில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை, சேகரிக்கப்பட்ட கழிவுகளை செயலாக்குதல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, சாம்பல் நீர் மேலாண்மை, களத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காட்சித் தூய்மைையப் பராமரித்தல் உள்ளிட்டவை அடங்கும்’ எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது கடிதத்தில், ‘முன்மாதிரி கிராமத்தை தேர்ந்தெடுப்பதற்கான வரைவு வழிகாட்டுதல்களையும் அனுப்பியுள்ளார். அதில், ‘மாநிலம், மாவட்டம், தொகுதி அளவில் சிறந்த கிராமங்களை தேர்வு செய்ய தலா 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தேர்வு செய்யும் கிராமங்களுக்கு விருது வழங்குவதற்காக ரூ.3.225 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது இவ்விருது வழங்கப்படும்’ எனத்தெரிவித்து இருந்தார். இதனை கவனமாக பரிசீலனை செய்த அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இயக்குநர் அனுப்பிய முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ரூ.3,22,50,000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments