மல்லிப்பட்டினத்தில் கணவர் உயிர் பிழைக்க 6 மாத பேத்தியை பலி கொடுத்த பாட்டி






மல்லிப்பட்டினத்தில் 6 மாத பெண் குழந்தை தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குறி கேட்டு கணவர் உடல்நலம் பெற பேத்தியை கொன்ற பாட்டி கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில்  நீர் நிறைந்த மீன் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை இறந்துகிடந்தது தொடர்பாக காவல்துறையினர்  விசாரணை நடத்தியதில் கணவர் உடல் நலம் பெற பாட்டியே பேத்தியை கொலைசெய்தது அம்பலமாகியுள்ளது. 




பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன்(32) இவரது 6 மாத பெண் குழந்தை ஹாஜரா அவரது வீட்டின் பின்புறம் உள்ள மீன் வைக்கும் நீர் நிறைந்த  பிளாஸ்டிக் தொட்டியில் வியாழக்கிழமை சந்தேகமான முறையில்  இறந்து கிடந்தார்.

இறந்த குழந்தை மல்லிப்பட்டினம் ஜமாஅத்துக்கு உள்பட்ட முஸ்லிம் மையவாடியில் வியாழக்கிழமை  அடக்கம் செய்யப்பட்டார். 

இது குறித்து  கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து சேதுபாவாசத்திரம் காவல்துறையிடம் புகார் செய்ததன் பேரில் காவலர்கள் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில் பாட்டியே பேத்தியைக் கொன்றது அம்பலமாகியுள்ளது. 

நசுருதீன் சின்னம்மா ஷர்மிளாபேகம்(48). இவரது கணவர் அஸாருதீன் (50) வெளிநாட்டில்வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியதிலிருந்து அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாராம். இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷணாஜிபட்டினத்தில் குறிசொல்லும் முகமது சலீம் (48)என்பவரிடம் ஷர்மிளா பேகம் சில நாள்களுக்கு முன்பு குறிபார்த்துள்ளார்.

உனது கணவர் உடல்நலம் குணமடைய உயிர்ப்பலி கொடுக்கவேண்டும் என்று குறிபார்ப்பவர்  சொன்னாராம். இதனால் தமது வீட்டுக்கு அருகில் உள்ள அக்கா மகன் நசுருதீன் குழந்தை ஹாஜராவை புதன்கிழமை நள்ளிரவில் தூக்கிச்சென்று தண்ணீர் உள்ள மீன்தொட்டியில் அமுக்கி பலி கொடுத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின்  சடலம் தோண்டியெடுக்கப்பட்டு உடற்கூராய்வு நடைபெற்றது. 

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை (பொ)  ஷர்மிளா பேகம், அவரது கணவர் அஸாருதீன், குறிசொல்லும் முகமது சலீம் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை செய்து வருகின்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments