கோபாலப்பட்டிணத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை!



கோபாலப்பட்டிணத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் 5000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்களை, பள்ளி விடுமுறை நாட்களில் நடத்த அஞ்சல் துறை முன்வர வேண்டும். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உட்பட அரசுத்துறைககள் சார்ந்த பணிகளுக்கு ஆதார் அடையாள அட்டை அவசியமாகியுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது 'ஆதார்' எண் இணைக்க வேண்டியுள்ளது. மேலும் துவக்கப்பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க, 'ஆதார்' எண் தேவையாக உள்ளது. எனவே 5 வயது நிரம்பும் முன்னரே பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு 'ஆதார்' அடையாள அட்டை பெற வேண்டியுள்ளது.

தற்போது, மீமிசல் அஞ்சல் அலுவலகத்தில் மட்டுமே, புதிய ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும். போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால், 'அஞ்சல் அலுவலகத்தில், நாளொன்றுக்கு குறைந்த நபர்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. இதனால், தொலைதுார கிராமங்களில் இருந்து வருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கிராமப்புற பெற்றோருக்கு, குழந்தைகளுக்கு 'ஆதார்' அடையாள அட்டை பெறுவதற்கான விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வாக கோபாலப்பட்டிணத்தில் சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு வெளியிட்டு, கிராமந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தினால் அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அஞ்சல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments