`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால் எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல!’- கொந்தளிக்கும் கோபாலப்பட்டிணம் மக்கள்!`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல என கோபாலப்பட்டிணம் மக்கள் கொந்தளிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் VIP நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டடத்தை இடித்து, புதுக்கட்டடம் அமைத்துத் தரவேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களின் போது, கடற்கரையோர மீனவர்கள் மற்றும் பொதுமக்களை பேரிடர் பாதிப்பில் இருந்து பாதுகாக்க புயல் பாதுகாப்பு மையங்கள் கடற்கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5 கட்டடங்கள் கட்டப்பட்டன. 
இதனையடுத்து கடந்த 2005-ஆம் ஆண்டு கட்டட மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சில ஆண்டுகள் பயன்டுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கான்கிரீட் காரைகள் பெயர்ந்து, கதவு, ஜன்னல்கள் உடைந்து,  கட்டடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டும், கட்டிடத்தின் மேல்தளத்தில் ஆலமரம் வளர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் குடியிருந்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இப்பகுதி மக்களிடம் பேசியபோது, `புயல் பாதிப்பில் இருந்து எங்களைக் காப்பதற்காகவே, இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. புயலால் பாதிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, இந்தக் கட்டடத்தினால்தான் தற்போது எங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. கட்டுமாவடி முதல் மீமிசல் வரையிலும் கடந்த 40 வருஷத்துக்கு முன்னால் கட்டின எல்லா கட்டடமும் பாழடைந்து இடிந்த நிலையில்தான் இருக்கிறது. இடிந்த நிலையில் இருக்கிற பழைய கட்டடத்தை எல்லாம் இடிக்காமல், புதிதாக சில கட்டடங்கள் கட்டி இருக்கிறார்கள்.
அதுல, மீமிசலில் ஒரு புதிய கட்டடம் கட்டி இருக்கிறார்கள். எங்கள் ஊரில் மட்டும் 2500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கிறது. அப்படி இருக்க அதுபோதாது. இந்த கட்டடத்தை இடித்து புதுக் கட்டடம் கட்டித் தர வேண்டும்’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments