ஒமைக்ரான் வேகம் அதிகரிப்பு இரவு நேர ஊரடங்கை தேவைப்பட்டால் அமல்படுத்தலாம் மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனாவால், உலகின் பிற எந்த நாட்டையும் விட வல்லரசு நாடான அமெரிக்காதான் கூடுதல் பாதிப்புக்கு ஆளானது. இப்போது தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டு உலகமெங்கும் கால் பதித்து வருகிற ஒமைக்ரானும் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கி இருக்கிறது.


ஒமைக்ரான் தொற்றுக்கு உலக அளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 6½ லட்சம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.  அமெரிக்காவிலும் ஒமைக்ரான் முதல் களப்பலியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 50 வயது கடந்த ஒருவர் இந்த தொற்றால் இறந்துள்ளார். இவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர், ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளானவர் என தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் 213 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 77 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில்,  மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 

கொரோனா தொற்று பரவல் 10% மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டெல்டாவை விட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 4 நாட்களில் ஒமிக்ரான் பரவல் இரட்டிப்பாகியுள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார்

இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்தும், அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு இருக்கும் கட்டுப்பாடுகள், மருத்துவ வசதிகள், தடுப்பூசி நிலவரம் ஆகியவற்றை அறிய பிரதமர் மோடி, சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments