அறந்தாங்கி அரசுக்கல்லூரியில் தொல்காப்பியர் தமிழ்மன்றத் துவக்க விழா!அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்காப்பியர் தமிழ் மன்றத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.திருவாசகம், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் என்.கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.சந்திரகலா சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், "நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழி தொன்மையானது. தமிழில் பேசுவதும், எழுதுவதும் அருகி வருகின்றது. பேச்சு வழக்கு  மொழியிலும்கூட நிரம்ப குழப்பங்களும், மந்த நிலையும் காணப்படுகிறது. தமிழை முதன்மைப்பாடமாக பயின்றவர்கள், பயில்கிறவர்கள் அனைவரும் பிறமொழிக்கலப்பின்றி பேசவும், எழுதவும் வேண்டும். குறிப்பாக இன்றைய மாணவர்கள் நட்பைத் தேர்ந்தெடுப்பதில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். திருவள்ளுவர் நட்பு குறித்து ஏழு அதிகாரங்களைப் படைத்துள்ளார். மனிதனின் வளர்ச்சியைப் பாதிக்கும் ஆணவம்,  செருக்கை நாம் அடியோடு அழிக்க வேண்டும். தமிழ் மண்ணில் தூய மனித நேயம் தழைக்க வேண்டும்" என்று பேசினார். 

முன்னதாகத் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கா.காளிதாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிறைவாகத் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் தெ.தேன்மொழி நன்றி கூறினார். தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வீ.சு.மாலதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

விழா ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments