புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்: மத்திய பாதுகாப்பு படையினரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை




புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு படையினரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.

துப்பாக்கி குண்டு

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் போலீசாருக்குரிய துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இதில் திருச்சி விமானநிலையத்தில் பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் 10 பேர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த பயிற்சியின் போது ஒரு துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின் (வயது 11) தலையில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்றது எப்படி? என்பது பெரும் புதிராக உள்ளது. மலைகளை தாண்டி சென்றது எப்படி? என்பது தொடர்பாக தடயவியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது கீரனூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக இலுப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. தண்டாயுதபாணி நேற்று விசாரணை நடத்தினார்.

விசாரணைக்காக திருச்சியில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டட் நோயல், இன்ஸ்பெக்டர் சிதம்பரம் ஆகியோர் இலுப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்தனர். மேலும் கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்ரமணியன், கீரனூர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பஸினா பீவி, அஸ்வினி ஆகியோர் உடன் இருந்தனர்.

துப்பாக்கி ரகம்

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். மேலும் துப்பாக்கி ரகம், குண்டு பற்றியும், பயிற்சியில் ஈடுபட்டவர்களின் விவரம், மலையை தாண்டி குண்டு சென்றது எப்படி? என்பது குறித்தும் விசாரித்தார். இதேபோல கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோரிடமும் அவர் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணை நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நீடித்தது. இதில் சம்பவத்தன்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்ட அதே நேரத்தில் மற்றொரு பகுதியில் மத்திய மண்டலத்தை சேர்ந்த போலீசார் துப்பாக்கி சுடும் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடமும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்தை வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) ஆர்.டி.ஓ. ஆய்வு மேற்கொள்கிறார். அதன்பின் அறிக்கையை அவர் கலெக்டரிடம் சமர்ப்பிக்கிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments