புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்




புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் 15 முதல் 17 வயது வரையுடைய மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்ட தொடக்க நிகழ்ச்சி ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் தெரிவித்ததாவது:-

தடுப்பூசி டோஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 18 லட்சத்து 52 ஆயிரத்து 585 பேருக்கு தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் முதல் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 65 ஆயிரத்து 402 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 87 ஆயிரத்து 183 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் 15 முதல் 17 வயது வரையுடைய அனைத்து பள்ளி செல்லும் இளம் சிறார்களுக்கும், அந்தந்த பள்ளிகளிலேயே கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 800 மாணவர்களுக்கு தடுப்பூசி இரண்டு தவணைகளாக செலுத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

பின்னர் அவர் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உரிமை, பாதுகாப்பு, சட்ட உதவி, பாலியல் நலக்கல்வி, மனநலம், உடல் நலம், கற்றல் தொடர்பான ஆலோசனை மற்றும் உதவி, பாலியல் தொல்லை புகார்கள் குறித்து தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2411 மற்றும் வாட்ஸ்-அப் எண்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அமைச்சர் வெளியிட்டார். மேலும் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மகளிர் ஆகியோர்களுக்கு உதவிடும் வகையில் குழந்தைகளுக்கு 1098, மாணவர்களுக்கு 14417 மற்றும் மகளிருக்கு 181 என்ற மாநில அளவிலான உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்வம்

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 2007-ம் ஆண்டுக்கு முன் பிறந்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளியில் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாணவிகள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அப்போது முதல் 50 பேருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments