நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை







புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து வரப்பெற்றுள்ள நெல் அறுவடை எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அறுவடைக்கு தயாராக உள்ள விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி ஈரம் அதிகமுள்ள இடங்களில் செயின் மாடல் எந்திரங்களையும், மற்ற பகுதிகளில் டயர் மாடல் எந்திரங்களையும் அறுவடைக்குப் பயன்படுத்தலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயின் மாடல் அறுவடை எந்திரம் வாடகை ஒரு மணிக்கு ரூ.1,630 என்ற வீதத்தில் விவசாயிகள் பெற்று பயன் பெறலாம். இது தவிர, கூடுதலாக தற்போது தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரங்கள் வெளி மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்று தற்சமயம் இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி வாடகை தொகையினை ஒரு மணி நேரத்திற்கு டயர் வகை வண்டிக்கு ரூ.1,600 மற்றும் செயின் வகை வண்டிக்கு ரூ.2,200 என்ற அளவில் முன்னோடி விவசாயிகள், வேளாண் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்புக் கூட்டத்தில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்யப்படுவதாக புகார் ஏதும் பெறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments