அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் 79 பேர் மீது வழக்கு
அறந்தாங்கி-புதுக்கோட்டை சோதனைச்சாவடி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 79 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொதுமக்கள் அவதி

அறந்தாங்கி நகராட்சியை ஒட்டிய பகுதியான மூக்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் சாலை மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதேபோல் விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நெல் பயிர்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

79 பேர் மீது வழக்கு

இந்தநிலையில் மழைநீரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் அறந்தாங்கி-புதுக்கோட்டை சோதனைச்சாவடி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், நகராட்சி ஆணையர் லீமாசைமன், தாசில்தார் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட 79 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனைதொடர்ந்து சாலையில் தேங்கி கிடந்த மழைநீரை பொக்லைன் எந்திரம் மூலம் பாதை அமைத்து நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments