புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி வழி உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப்பணியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கவிதாராமு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநில தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணையின்படி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் பயன்பாட்டிற்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப்பணி நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 121 வாக்குச்சாவடிகளுக்கு 146 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 2 நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 159 வாக்குச்சாவடிகளுக்கு 191 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் என மொத்தம் 337 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 324 கட்டுப்பாட்டு கருவிகளும், 869 வாக்குப்பதிவு கருவிகளும் உபரியாக இருப்பில் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலின்படி புதுக்கோட்டையில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 277 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 576 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 873 வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments