350 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

350 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கஞ்சா கடத்தல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சிவா (வயது 31). சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் ஆனந்தன் (37). இவர்கள் 2 பேரும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் லாரியில் 350 கிலோ கஞ்சாவை மூட்டை, மூட்டையாக கடத்திக்கொண்டு வந்தனர். இது தொடர்பாக மதுரை மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே அந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 2 பேரிடம் விசாரணை நடத்தியதில், அந்த கஞ்சாவை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ராஜேந்திரன் (61) என்பவரிடம் கொடுப்பதற்காக சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிவா, ஆனந்தன், ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 350 கிலோ கஞ்சாவையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

10 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி குருமூர்த்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிவாவுக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் தலா 3 மாதங்களும், ஆனந்தனுக்கு 3 பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் தலா 3 மாதங்களும், ராஜேந்திரனுக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments