வரும் ரயில்வே பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை திட்டம் அறிவிக்கப்படுமா?.. தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்புவரும் ரயில்வே பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை திட்டம் அறிவிக்கப்படுமா?.. தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

ஒன்றிய அரசின் 2022-23க்கான முழு பட்ஜெட் வரும் 1ம் தேதி தாக்கல்
செய்யப்பட இருக்கிறது. தற்போது தமிழகத்தில் சுமார் 3852 கி.மீ. அளவில் இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளன. மக்கள் தொகை, பரப்பளவை ஒப்பிடும் போது தமிழகத்தின் 1,30,058   பரப்பளவுக்கு 4131 கி.மீ. இருப்புதை வழிதடங்கள் மிக குறைவு ஆகும். மக்கள் தொகை அடர்த்தியை போல ரயில் அடர்த்தியையும் கணக்கிட்டு வருகின்றார்கள். தமிழகம்  அகில இந்திய அளவில் வளர்ச்சியில் 2வது பொரிய மாநிலம் ஆகும்.

இந்த ரயில் அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ. பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்புபாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும். தமிழகத்தில் தற்போது 32.07 ரயில் அடர்த்தி உள்ளது. இதை படிபடியாக 50 வரை அதிகரிக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு தமிழகம் செலுத்தும் வரிவருவாயில் 2வது இடத்தில் உள்ளன. வரிவருவாயில் 2வது இடத்தில் உள்ளதை போல ரயில் அடர்த்தியிலும் 2வது இடத்துக்கு வரவேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு புதிய இருப்புபாதை திட்டத்தையாவது செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லும். வேலையில்லா திண்டாட்டம், வறுமை, போதிய தொழில் வளர்ச்சி இல்லாததால் தென் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. ஆகவே போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, மும்பை, பெங்களுர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் விருதுநகர் - மானாமதுரை, திருநெல்வேலி  திருவனந்தபுரம் பாதை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில்பாதைகள் ஆங்கிலேயர் காலத்திலே அமைக்கப்பட்டது ஆகும்.

திருநெல்வேலி நாகர்கோவில்  74 கி.மீ. புதிய அகல ரயில்பாதை 8.4.1981ம் தேதியும், கன்னியாகுமரி  திருவனந்தபுரம் 87 கி.மீ. புதிய அகல ரயில்பாதை 15.4.1979 தேதியும், விருதுநகர் - அருப்புக்கோட்டை மீட்டர்கேஜ் பாதை 1.9.1963 தேதியும், அருப்புகோட்டை மானாமதுரை மீட்டர்கேஜ் பாதை 2.5.1964 தேதியும் பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்த 2 திட்டங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென்மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இருப்புபாதைகள் ஆகும்.

அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைகுடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்க நிலை பொறியியல், போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்புபாதை அமைக்க தொடக்க நிலை பொறியியல், போக்குவரத்து ஆய்வுபணி 2013-14-ம் ஆண்டு நிறைவு பெற்று முடிவடைந்து திட்ட மதிப்பீடை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்பித்துவிட்டது.

இந்த ஆய்வுப்பணி 2 பிரிவுகளாக நடந்தது. அதன்படி காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில்பாதை அமைக்க ஆய்வு பணி நடந்தது. இந்த பணியில் 214.81 கி.மீ. தூரம் ரயில்பாதை அமைக்க 879 கோடி தேவை என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டிணம், கீழகரை, ஏர்வாடி, சாயல்குடி, சூரங்குடி வழியாக தூத்துக்குடிக்கு சர்வே செய்யப்பட்டது.  

அதேபோல் கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் இருந்து தூத்துகுடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க நடந்த ஆய்வு பணியில் இந்த திட்டம் 247.66 கி.மீ. தூரத்துக்கு ரயில்பாதை அமைக்க ரூ. 1080 கோடி தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டிணம், மணிநகர், திசையன்விளை, நாவலடி, கூடங்குளம், மகாராஜபுரம், பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும்.

காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த 2 திட்டங்களை சேர்த்து, 462.47 கி.மீ. தூரத்தில் 1965.763 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ரயில்வே வாரியம், திட்டகுழு ஒரு புதிய ரயில்வே இருப்புபாதை திட்டத்தை பல கோடி முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு திட்டம், பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் திருப்பி கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டத்தை அறிவிப்பார்கள்.

இதற்கு ரேட் ஆப் ரிட்டன் என்று கூறுவார்கள். இந்த கிழக்கு கடற்கரை பாதை ரயில்வே திட்டம் துறைமுகம், மின்திட்டங்கள், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, இந்த பகுதியில் உள்ள தொழில்சாலைகள் என்று பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வருமானங்களை கணக்கில் கொண்டு இந்த ரேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்யப்படும். இந்த கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டத்தில் காரைக்குடி  தூத்துக்குடி மைனஸ் -8.3  ரேட் ஆப் ரிட்டன்  ஆகவும் தூத்துக்குடி - கன்னியாகுமரி பாதை -8.88 ரேட் ஆப் ரிட்டன்  ஆகவும் உள்ளது.  

இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன் உள்ளதால் இந்த திட்டம் செயல்படுத்துவதில் பெரும் சிக்கல் உள்ளது. இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன்  வரும் திட்டங்களை ஆய்வு செய்து விட்டு கைவிட்டு விடுவார்கள். இவ்வாறு கைவிடப்பட்ட திட்டங்கள் பல உள்ளன. ரேட் ஆப் ரிட்டன்  குறைவாக உள்ள காரணத்தால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வே வாரியம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த வழி தடத்தில் சுற்றுலா உள்பட பல்வேறு ஆன்மீக தலங்கள் உள்ளன.

இந்த தடம் அமைக்கப்படும் பட்சத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக அமையும். இந்த வழி தடத்தில் கூடங்குளம், உடன்குடி போன்ற பகுதிகளில் பல கோடி முதலீட்டுடன் கூடிய புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கடலோர மாவட்டங்கள் அதிகமாக பயன்பெறும். இந்த திட்டம் வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும். இந்த திட்டத்தை உடனே நிறைவேற்ற தென் தமிழக எம்.பிக்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டம் ரேட் ஆப் ரிட்டன் குறைவாக இருக்கின்ற காரணத்தால் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தென்மாவட்ட பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தென்மாவட்ட வளர்ச்சிக்காக இந்த கிழக்கு கடற்கரை ரயில்பாதையை சிறப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் ஆய்வு செய்து வரும் பட்ஜெட்டில் அறிவித்து சிறப்பு கவனம் செலுத்தி போதிய நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்பதுதான் தென்மாவட்ட மக்கள் கோரிக்கையாகும்.

ஆளூர் ரயில்பாதை முடக்கம்
குமரி மாவட்டம் ஆளூரில் இருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிக்குளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்க நிலை பொறியியல், போக்குவரத்து ஆய்வுக்கு 2013ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த வழித்தடம் ஆளூரில் தொடங்கி ஆசாரிப்பள்ளம், கோணம், பொட்டல், பறக்கை வழியாக நாகர்கோவில் சந்திப்பு வந்துவிட்டு, அங்கிருந்து தேரூர், மருங்கூர், மைலாடி, அஞ்சுகிராமம் வழியாக செட்டிக்குளம் செல்லுமாறு 20.54 கி.மீ. தூரம் சர்வே செய்யப்பட்டது. இந்த திட்டம் குறைந்த ரேட் ஆப் ரிட்டன் உள்ள காரணத்தால் ரயில்வே வாரியத்தால் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments