சிறுவன் உயிரை பலிகொண்ட புதுக்கோட்டை துப்பாக்கி சுடும் பயிற்சிமையம் மூடப்பட்டது: தமிழக அரசு





கடந்த டிசம்பர் 30ம் தேதியே புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அத்தளம் பயன்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசுத்தரப்பில் மதுரைக்கிளையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த கவிவர்மன் என்ற சுரேஷ் கண்ணா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழக காவல்துறை மொத்தமாக நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தபட்சம் ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் இருக்கும். அந்த தளங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அந்த பயிற்சித் தளத்தின் பொறுப்பதிகாரியின் கடமை.

இப்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக அதுதொடர்பான எச்சரிக்கையை வழங்க வேண்டும். தமிழக காவல்துறையும், CISF காவல்துறையினரும் இந்த பயிற்சி தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். விதிப்படி பயிற்சி காவலர்கள் அதிக திறன் வாய்ந்த துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தக் கூடாது. ஆனால் அது பெயரளவிலேயே உள்ளது. கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி 11 வயது சிறுவர் மீது, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது. நான்கு நாட்களுக்கு பிறகு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார். அதுபோல சக்தி வாய்ந்த துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் பயனில்லை. ஆகவே, " ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் மரணத்தை விசாரிக்கவும், சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கவும் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில், " கடந்த டிசம்பர் 30ம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அத்தளம் பயன்படுத்தப்பட மாட்டாது" என உறுதி அளிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments