திருவாரூர்-காரைக்குடி இடையே அனைத்து ரெயில் சேவையும் விரைவில் தொடங்கப்படும் - திருச்சி ரெயில்வே கோட்ட துணை மேலாளர்


திருவாரூர்-காரைக்குடி இடையே அனைத்து ரெயில் சேவையும் விரைவில் தொடங்கப்படும் என்று திருச்சி ரெயில்வே கோட்ட துணை மேலாளர் ராமலிங்கம் கூறினார்.

ஆய்வு

திருவாரூர் ரெயில் நிலையத்தில் திருச்சி ெயில்வே கோட்ட துணை மேலாளர் ராமலிங்கம் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் குறுங்காடு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரெயில் நிலையத்தில் தூய்மை சுகாதாரம் குறித்து பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து ரெயில் சேவைகளும்...

திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள 75 ரெயில்வே கேட்டுகளில் முன்னாள் ராணுவத்தினர்களை தற்காலிக ரெயில்வே கேட் கீப்பர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி நிறைவு அடைந்ததும் அனைத்து ரெயில் சேவைகளும் முழுமையாக தொடங்கப்படும்.
 
திருவாரூர் ரெயில் நிலையத்தில் 1-வது மற்றும் 4-வது நடைமேடைகளில் இரண்டு எஸ்கலேட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2-வது மற்றும் 3-வது நடைமேடைகள் உயர்த்த வேண்டி உள்ளது. நடைமேடை உயர்த்தப்பட்ட பின்னர் எஸ்கலேட்டர் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை மனு

ஆய்வின்போது திருவாரூர் ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கர், திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் திருவாரூர் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர்.

முன்னதாக திருவாரூர் ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை ரெயில்வே திருச்சி கோட்ட துணை மேலாளர் நட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments