புதுக்கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் கொட்டி கிடந்த நெல்மணிகள்







புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கொட்டி கிடந்த நெல்மணிகளால் பல மூட்டைகள் வீணாகியது. இதனை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர்
 
சரக்கு ரெயில்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்கள் நிறுத்தி இயக்க தனி தண்டவாள பாதை உள்ளது. புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயில்களில் வேகன்களில் கொண்டு வரப்படும் நெல், அரிசி, உரம், கோதுமை, சிமெண்டு மூட்டைகள் உள்ளிட்டவை அங்கிருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த நிலையில் காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் அரவைக்காக புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயில்களில் வேகன்களில் கொண்டு வரப்பட்டன. வேகன்களில் இருந்து இறக்கப்பட்ட மூட்டைகள் லாரிகள் மூலம் அரவைக்காக மில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.




தண்டவாளத்தில் கொட்டப்பட்ட நெல்மணிகள்
இந்த நிலையில் சரக்கு ரெயில்களை நிறுத்தி வைத்து நெல் மணிகளை இறக்குவதில் வாடகை பிரச்சினை உருவானதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஆனதால் வேகன்களில் இருந்த நெல் மணிகள் தண்டவாளத்தில் அருகேயும், தண்டவாளத்திலும் கொட்டப்பட்டன. கடந்த 2 நாட்களாக அவை அதே இடத்தில் கிடந்தது. அதனை தொழிலாளர்கள் மூலம் அள்ளி சாக்கு மூட்டைகளில் அடுக்கி லாரிகளில் ஏற்றி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதற்கிடையில் தண்டவாளத்தில் கொட்டப்பட்ட நெல்மணிகள் பல மூட்டை கணக்கில் வீணாகி போகின. மேலும் திறந்தவெளியில் கொட்டப்பட்ட நெல் மணிகளை கால்நடைகள் தின்றன. விவசாயிகள் கடும் பாடுப்பட்டு விளைவித்த நெல் மணிகள் தண்டவாளத்தில் கொட்டப்பட்டு கிடந்ததை கண்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கண்டு வேதனை அடைந்தனர். இதுபோன்று வீணாக்காமல் அதனை முறையாக மூட்டைகளில் அள்ளி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments