புதுக்கோட்டை நகராட்சி கண்ணோட்டம்





வருகிற பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. புதுக்கோட்டை நகராட்சிக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த நகராட்சி பற்றிய கண்ணோட்டம் வருமாறு:-

பழமையான நகராட்சி

தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் புதுக்கோட்டை நகராட்சிக்கு தனி சிறப்பு உண்டு. மன்னர்கள் ஆட்சி காலத்திலேயே நகராட்சி நிர்வாகம் இருந்துள்ளது. தனி சமஸ்தானமாக விளங்கிய இங்கு அழகிய கட்டிடங்களை கொண்டு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாகும். தற்போதைய கலெக்டர் அலுவலகமான மன்னர் அரண்மனை, கோர்ட்டு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் பழமையானதாகும்.


புதுக்கோட்டை நகராட்சி மிகவும் பழமையான நகராட்சியாகும். 1912-ம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சி உருவாக்கப்பட்டது. இதன் தொடக்க காலத்தில் இதன் நிர்வாக பொறுப்பினை மன்னர்கள் பிரதிநிதிகள் 4 பேரும், பொதுமக்கள் பிரதிநிதிகள் 4 பேரும் கவனித்து வந்தனர். அதன்பின் 1924-ம் ஆண்டு 12 நபர்களாகவும், 1930-ல் 16 நபர்களாகவும், 1936-ல் 18 நபர்களாகவும் இருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு நகராட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யும் முறை வந்தது. இதில் முதலில் 1947-ல் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர்களாக எஸ்.வி.எஸ்.சிவசாமி சேர்வை, சண்முகம் செட்டியார், தர்மராஜ்பிள்ளை, கே.வீரையா (தி.மு.க), தியாகராஜ காடுவெட்டியார்(சுயே), முகமதுகனி (காங்), துரை திவியநாதன் (எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.), ராமதிலகம் உடையப்பன் (தி.மு.க.) மற்றும் கார்த்திக் தொண்டைமான் (அ.தி.மு.க.), சேட் என்கிற அப்துல் ரகுமான் (பொறுப்பு) (அ.தி.மு.க.), ராஜசேகரன் (அ.தி.மு.க.) ஆகியோர் பதவி வகித்தனர்.

42 வார்டுகள்

புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. கடந்த 2011 அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான் வெற்றி பெற்று நகர்மன்ற தலைவரானார். அப்போதைய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முத்துக்குமரன் 1.4.2012-ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து புதுக்கோட்டைக்கு நடந்த இடைத்தேர்தலில், நகர்மன்ற தலைவராக இருந்த கார்த்திக் தொண்டைமானுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனால் அவர் தனது நகர்மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் நகர்மன்ற துணைத் தலைவராக இருந்த அப்துல் ரகுமான் நகர்மன்ற பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார். புதுக்கோட்டை நகராட்சி தலைவருக்கான இடைத்தேர்தல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. சார்பில் ராஜசேகரன் நகர்மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடிப்படை பிரச்சினைகள்

நூற்றாண்டு விழா கண்ட நகராட்சியான புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைநகரத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சி இதுவாகும். இங்கு அடிப்படை வசதிகள் போதுமானதாக இருந்தாலும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் நீடித்தப்படியே உள்ளது. குறிப்பாக பாதாள சாக்கடை வசதி முழுமையாக நிறைவேற்றப்படாமல், குறைபாடுகளுடன் இருப்பது, பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் வசதி இல்லாதது, சுகாதார வசதி, சாலை வசதி உள்ளிட்டவை அடிப்படை பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை நகரப்பகுதி புழுதி பரந்த சாலைகளாகவே காணப்படுகிறது. வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. 16 வீதிகளை உள்ளடக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்தப்படி உள்ளது. இந்த அடிப்படை பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். வளர்ச்சி பணிகளை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

குளங்கள்

இதேபோல புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் குளங்கள் அதிகமாக உள்ளது. இந்த குளங்கள் மன்னர் காலத்தில் வெட்டப்பட்டது. மழைகாலத்தில் இந்த குளங்கள் நிரம்பினால் மற்றொரு குளத்திற்கு தண்ணீர் சென்று அந்த குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கும் செல்லும் வகையில் கட்டமைப்புகள் இருந்தன. ஆனால், காலப்போக்கில் மக்கள் தொகை பெருக்கம், ஆக்கிரமிப்புகளால் இந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குளங்கள் நிரம்பினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது. அதாவது புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியான கடைவீதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதை யாராலும் மறக்க முடியாது. இதனால் குளங்களை முறையாக பராமரித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிந்தோட வகை செய்ய வேண்டும் என்பதும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

கள நிலவரம்

புதுக்கோட்டை நகராட்சியில் தலைவர் பதவி பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளும் கட்சியான தி.மு.க.வில் ஆண் நிர்வாகிகள் தலைவர் பதவியை குறி வைத்து வந்த நிலையில் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு மாறியதால் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் தங்களது குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளனர். இந்த முறை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வார்டுகளில் கவுன்சிலர் பதவியை கைப்பற்றி விட்டால் எளிதாக தலைவர் பதவியை கைப்பற்றி விடலாம் என தி.மு.க.வினர் களத்தில் உள்ளனர். எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் தலைவர் பதவியை குறி வைக்கிறது. அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுயேட்சைகள்

உள்ளாட்சி தேர்தல்களை பொறுத்தவரை அந்தந்த வார்டுகளில் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இருப்பினும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் என்றால் அறிமுகம் தேவையில்லை. இதில் போட்டியிட வாய்ப்பு கேட்டு இடம் கிடைக்காதவர்கள் சுயேட்சையாகவும் களத்தில் குதிக்க அரசியல் கட்சியில் உள்ள நிர்வாகிகள் சிலர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டனர். உட்கட்சி பூசலால் கவுன்சிலர்கள் பதவிக்கான வெற்றி வாய்ப்பை பெறுவதில் சிலருக்கு சறுக்கலாம் எனக்கூறப்படுகிறது. கூட்டணி கட்சியினர் முழு ஒத்துழைப்போடு வேலை பார்த்தால் முழு பலன் கிடைக்கும் என பேசப்படுகிறது. ஆனால், வார்டு ஒதுக்கீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பு வாக்குப்பதிவில் எதிரொலிக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எதுவாயினும் வருகிற 19-ந் தேதி கவுன்சிலர் பதவி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையில் முடிவு தெரியும். இதில் அதிக கவுன்சிலர் பதவிகளை யார் கைப்பற்றுகிறார்களோ? அந்த கட்சியினர் மார்ச் 4-ந் தேதி நடைபெறும் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறுவார்கள். இதிலும் வெற்றி வாய்ப்பு சிலருக்கு பிரகாசமாக இருந்தாலும் அந்த நேரத்தில் நிலைமை திடீரென மாறினாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் கடந்த காலத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிரடி திருப்பங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நகராட்சி எல்லைப்பகுதிகளை பொறுத்தவரை மொத்தம் 21.95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும். மொத்த மக்கள் தொகை 2011 கணக்கெடுப்புபடி- 1,43,748.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments