ஆலங்குடி பேரூராட்சி கண்ணோட்டம்
ஆலங்குடி 1930-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி ஊராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 1948-ம் ஆண்டு 2-ம் நிலை ஊராட்சியாகவும், 1963-ம் ஆண்டு முதல் நிலை ஊராட்சியாகவும் 1982-ம் ஆண்டு பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
 
மக்கள் தொகை
ஆலங்குடி பேரூராட்சி 3.09 கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இங்கு அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் அதிகமாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் ஆலைகள் நலிவடைந்து மூடப்பட்டு திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டன.
ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியின் மக்கள்தொகை 15 ஆயிரம் ஆகும். இவற்றில் 4,886 ஆண்களும், 4,987 பெண்கள் என்று மொத்தம் 9 ஆயிரத்து 873 வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக 2-வது வார்டில் மட்டும் 884 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக 13-வது வார்டில் 348 வாக்காளர்களும் உள்ளனர். 

தலைவர்கள்
1930-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை செய்யது காதர்பாவா ராவுத்தர், நாராயணசாமி மற்றும் முகமது மைதீன் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். 1963-ம் ஆண்டிற்கு பின்னர் நடந்த தேர்தல்களில் 4 முறை அ.தி.மு.க.வும், 2 முறை தி.மு.க.வும், ஒருமுறை ஜனதா கட்சியும் வெற்றி பெற்று தலைவர்களாக இருந்தனர். ஓட்டுப்போடும் முறைக்கு பின்னர் சுந்தரக்கண்ணு, முகமது யூசுப், ராமச்சந்திரன், குமுதவள்ளி, சித்திரலேகா, சுரேஷ், மனமோகன் ஆகியோர் தலைவர்களாக இருந்துள்ளனர்.

இந்த தேர்தலில் அதிக வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சி தலைவர் பதவியை தக்கவைக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை.

வார்டுகள் ஒதுக்கீடு
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 1, 2, 4, 6, 8, 13, 15-வது வார்டுகள் பொது (பெண்கள்), 3-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 9-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்கள்), 5, 7, 10, 11, 12, 14 ஆகிய வார்டுகள் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 

ஆலங்குடி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். வாரச்சந்தை திடலை மேம்படுத்த வேண்டும். ஆலங்குடி பகுதியில் கிளை சிறை அமைக்க வேண்டும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கென சொந்த கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். சிவன் கோவில் ஊருணியை மேம்படுத்த வேண்டும், ஆலங்குடி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments