கத்தாரில் சிக்கி தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் வாலிபர்- மீட்டு தருமாறு மனைவி கோரிக்கை





ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் காதர் மைதீன் (வயது39). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நீண்ட நாட்களாக ராமநாதபுரத்தில் பணிபுரிந்து குடும்பத்தை கவனித்து வந்தார். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வெளிநாடு செல்ல முடிவு செய்தார். கத்தார் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு பணம் செலுத்தி கடந்த ஜூலை மாதம் சென்றார். டிரைவர் வேலைக்காக சென்ற காதர் மைதீனுக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை காத்திருந்தது. டிரைவர் வேலைக்கு தான் வந்தேன். ஒட்டகம் மேய்க்க தெரியாது என்று தெரிவித்ததும் சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர். சம்பளமும் சரியான உணவும் கிடைக்காமல் காதர் மைதீன் சிரமம் அடைந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஷாஜிதா பானு கூறியதாவது:-

எனது கணவருக்கு விசா வழங்கிய அரபு நாட்டுக்காரர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மற்றொரு அரேபியரிடம் விற்று விட்டார். டிரைவர் வேலைக்கு இங்கிருந்து அழைத்துச் சென்று விட்டு ஒட்டகம் மேய்க்க தெரிவித்துள்ளனர். ஒட்டகம் மேய்க்க தெரியாது என்றவுடன் சித்ரவதை செய்துள்ளனர். அங்கு படும் சிரமங்களை மொபைல் போனில் கண்ணீர் மல்க கணவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கணவரை இந்தியா மீட்டு வருமாறு மனு அளித்தேன். எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக எனது கணவர் வீடியோவில் அங்கு உள்ள சூழ்நிலையை, துயரத்தை காதர் மைதீன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், கத்தாரில் ஒட்டகம் மேய்க்கச்சொல்லி சித்ரவதை செய்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும் சிரமப்படுகிறேன். கழுத்தில் கயிறு போட்டு, அடித்து மிதிக்கின்றனர். இங்கே கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர். 6 மாதமாக கொடுமைப்படுத்துகின்றனர். காரை ஏற்றி கால் முறிந்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை தயவு செய்து மீட்க வேண்டும், என அழுது புலம்பியுள்ளார்.அந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. அங்குள்ள பல்வேறு தரப்பினரும் எனது கணவரை மீட்டு தருவதாக ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எனது கணவரை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments