அரிமளம் பேரூராட்சி கண்ணோட்டம்




புதுக்கோட்டை சமஸ்தானமாக இருக்கும் பொழுது அரிமளம் பெரிய ஊராக இருந்தது. பொற்குடையான் ஊரணியில் விடப்படும் தெப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. பாண்டிய நாட்டிற்கு கடைசி ஊராகவும், சோழ நாட்டிற்கு தொடக்க ஊராகவும் அரிமளம் இருந்து வந்துள்ளது. கோவில்கள் மற்றும் குளங்கள் அதிகம் உள்ள ஊர் அரிமளம். அரிமளவாயில் என்பது நாளடைவில் மருவி அரிமளம் என அழைக்கப்பட்டு வருகிறது.


அரிமளம் பேரூராட்சி புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஜெய விளங்கி அம்மன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 1956-ம் ஆண்டு திருச்சி மாவட்டமாக இருந்த போது அரிமளம் பேரூராட்சி செயல்பட்டு வந்தது. 1972-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கும் போது அரிமளம் பேரூராட்சி தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அரிமளம் பேரூராட்சியில் ஆண்கள்  3,564 பேரும் பெண்கள் 3,855 பேரும், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,420 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண்கள் அதிகளவில் உள்ளனர்.

அரிமளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 78 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன.
தி.மு.க.- அ.தி.மு.க. இடையே கடும் போட்டி
அரிமளம் பேரூராட்சி தலைவர்களாக அண்ணாமலை, முத்துவீரப்பன், கருப்பாயி வெள்ளைச்சாமி, சீதாலட்சுமி காசி, சோமு, மாரியப்பன் ஆகியோர் பதவி வகித்து உள்ளனர். தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அரிமளம் பேரூராட்சியை கைப்பற்ற தி.மு.க.- அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த பேரூராட்சியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், நர்சரி கார்டன் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள். அரிமளம் பேரூராட்சி பகுதியில் அதிகளவு தைல மரக்காடுகள் இருப்பதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. இந்த பேரூராட்சியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments