கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்




கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு கடந்த ஆண்டு (2021) மே மாதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை கட்டாயமில்லை என அறிவித்தது. ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் அவருக்கான அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இருப்பினும் சில கொரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் கட்டாயம் என்று கூறியதாக புகார்கள் வந்தன.

பொதுநல மனு

இதையடுத்து ‘கோவின்’ இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து, மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த வக்கீல் சித்தார்த் சங்கர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ‘மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், நடைமுறை செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கொண்டு வரச்சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும்’ கூறியிருந்தார்.

கட்டாயம் இ்ல்லை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு மத்திய அரசு பதில் அளிக்க கடந்த அக்டோபர் 1-ந்தேதி உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் எண் அட்டை கட்டாயமல்ல, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்’ என தெரிவித்தார்.

ஆதார் அட்டை கேட்கக்கூடாது

இதையடுத்து தடுப்பூசி போட வரும் மக்களிடம் ஆதார் அட்டை கேட்டு வலியுறுத்த வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சகத்தின் கொள்கையின்படி செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments